Monday, 30 March 2015

பள்ளிப் பாடத்துடன் பசிக்கு உணவு : 'தாய்மையுடன்' ஆசிரியப்பணி: விடுமுறையிலும் தவறாத கடமை

மேலுார்:அரசுப் பள்ளி தானே என்று ஏளனமாக பார்ப்பவர்கள், இதைப்படித்தால் ஆச்சரியப்படத் தான் வேண்டும்; மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தை செலவழித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மெனக்கெடுகின்றனர். மதுரை அருகே மேலுார் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த செயலைப் பார்த்து ஆசிரியர் சமூகம் 'காலரை' துாக்கி விட்டு பெருமைப்படலாம்.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால் மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை நூறு சதவீதம் தேர்ச்சி பெறச்செய்ய தலைமை ஆசிரியர் துரைப்பாண்டி முயற்சிகள் எடுத்து வருகிறார். கணித ஆசிரியர் சண்முகப்பிரியா, ஜோனாமேரி ஆகியோர் இதற்கு பக்கபலமாய் உள்ளனர்.இவர்கள் ஆரம்பம் முதலே விடுமுறை நாட்களில் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தி வருகின்றனர்; மாணவர்கள் பசியுடன் வந்தால் பாடம் மனதில் நிற்குமா? தாய்மை உள்ளத்துடன், சொந்த செலவில் மதிய உணவும் வழங்குகின்றனர் ஆசிரியைகள்.

இதுகுறித்து சண்முகப்பிரியா கூறியதாவது:-மாணவர்களுக்கு 'காம்பஸ்', பாகை மாணி, ஸ்கேல், பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை இலவசமாக கொடுத்து கற்பிக்கிறோம். விடுமுறை நாட்களில் பள்ளியில் இலவச மதிய உணவு கிடையாது; ஆசிரியைகளின் செலவில் உணவு கொடுக்கிறோம். மேலும் கேள்வித்தாள் (மெட்டீரியல்) நகல் கொடுத்து கற்பிக்கிறோம் என்றார்.ஜோனாமேரி கூறியதாவது: விடுமுறையில் மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருந்து விடுவர்; அவரவர் வீட்டிற்கு போனில் அழைத்து, சிறப்பு வகுப்பு எடுக்கிறோம். தவறாது கலந்து கொள்வோருக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கிறோம் என்றார்.
மாணவர்கள் கூறியதாவது:
பிரபாகரன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்ததால், அதில் கவனம் போய்விடும் என பயந்தேன். இதனால் வீட்டில் இருப்பதை விட பள்ளிக்கு வருவது உபயோகமாக இருந்தது.
ராஜ்குமார்:- வீட்டில் இருந்தால் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவோம். பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்துவது படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது.இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment