Sunday, 22 March 2015

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, புதிய
கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை வகித்தார். இதில், பல்வேறு மாநில கல்வி அமைச்சர்களும், தலைமை செயலர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். குஜராத் மாநில கல்வி அமைச்சர் புபேந்திரசிங் சவுதாசமா கூறுகையில், 'நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் இளைஞர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். கல்விக்காக அதிக நிதி செலவழிக்கும் மாநிலத்துக்கு மத்திய அரசு சார்பில் ஊக்க நிதி வழங்கலாம். தரமான ஆசிரியர்கள், தொடர்ச்சியான ஆசிரியர் பயிற்சி வகுப்புகளை உறுதி செய்ய வேண்டும்' என்றார். மத்தியப் பிரதேச மாநில கல்வி அமைச்சர் பராஸ் சந்தர் கூறுகையில், '8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி கொள்கையால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது. சுமாராக படிக்கும் மாணவர்கள் 8ம் வகுப்புக்கு பிறகு அடுத்தடுத்த தேர்வுகளை எதிர்கொள்வதில் சிரமப்படுகின்றனர். அவர்களால் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமல் போகிறது' என்றார். இதே கருத்தை அசாம், நாகலாந்து, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநில அமைச்சர்களும் வலியுறுத்தினர். பள்ளி தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனவும் பல அமைச்சர்கள் வலியுறுத்தினர். கூட்டத்துக்கு பின் பேட்டியளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் அதிகளவில் வந்துள்ளன. புதிய கல்விக் கொள்கையில் இதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்' என்றார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment