Sunday, 29 March 2015

அரசு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுமா?

அரசு அலுவலகங்களில் பொது மக்களின் அனைத்து தேவைகளுக்கும் உரிய சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை இலவசமாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்திலும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறவும், எந்தத் தேவையாக இருந்தாலும் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

உதாரணமாக ஜாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், இருப்பிடம், வருமானச் சான்றிதழ், புதிய மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்ட அனைத்துக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிப்பது அவசியம்.
இந்த நிலையில் எந்த அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் மக்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. அந்தந்த அலுவலகம் முன்பு உள்ள நகலகங்கள் அல்லது இடைத் தரகர்கள், மனுக்கள் எழுதி தருகிறோம் என்ற போர்வையில் அமர்ந்திருப்போரிடம் மட்டுமே விண்ணப்பங்கள் கிடைக்கின்றன.
அந்த விண்ணப்பங்கள் 5 பக்கம் இருந்தால் ரூ.10-க்கும், 10 பக்கங்களைக் கொண்ட விண்ணப்பமாக இருந்தால் ரூ. 30க்கும் விற்கப்படுகின்றன. கிராமங்களில் மின் இணைப்புக்கான 3 பக்கம் உள்ள விண்ணப்பம் ரூ. 10-க்கு விற்கப்படுகிறது. இதுபோல் கிராம மக்கள் அதிகளவில் பணத்தை கொடுத்து இதுபோன்ற விண்ணப்பங்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அதைப் பூர்த்தி செய்து தருவதற்கு கிராம மக்களிடம் ஒரு விண்ணப்பத்துக்கு தனியாக ரூ. 20 முதல் 30 வரை இடைத் தரகர்கள் வாங்கிக் கொள்கின்றனர்.
எனவே கிராம மக்களுக்கு அனைத்து அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை இலவசமாக வழங்குவதோடு, இலவசமாக மனுக்களை எழுதித் தர அலுவலர்களையும் நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment