மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு, இலவசவாய்ப்பாடு புத்தகம் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணிதெரிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
அரசு பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 448 உதவியாளர், 370 இளநிலை உதவியாளர் என, 818 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும்.
*மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தில், நிர்வாகப் பணி செம்மையாக நடைபெற, இரண்டுஉதவியாளர்; இரண்டு இளநிலை உதவியாளர்; ஒரு அலுவலக உதவியாளர்; ஒரு இரவுக் காவலர் பணியிடம் நிரப்பப்படும்.
*பள்ளிகளில் இருந்து இடைநின்ற மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, அவர்களின் தாய்மொழியில் கல்வி பயில, சிறப்பு பயிற்சி, 20கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். இத்திட்டத்தால், 40 ஆயிரம் குழந்தைகள் பயனடைவர்.
*நடப்பு கல்வியாண்டில், இதுவரை கம்ப்யூட்டர் வழங்கப்படாத, 657 நடுநிலைப் பள்ளிகளில், மூன்று கம்ப்யூட்டர்களுடன் கூடிய, கம்ப்யூட்டர் வழி கற்றல் மையம், ஒன்பது கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
*அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், 56 லட்சம் மாணவர்களின், பாடம் மற்றும் பாட இணை செயல்பாடுகளில், அவர்களின் திறன்களை மதிப்பிட்டு பதிவு செய்ய, மாணவர் திரள்பதிவேடு, எட்டு கோடி ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
*மாற்றுத்திறனுடைய, 1.30 லட்சம் குழந்தைகளுக்கு, உதவி உபகரணங்கள், போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் படி வழங்குதல், பெற்றோருக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தல் போன்றவை, எட்டு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
*மாணவர்களிடம் வாசிப்பு திறனையும், பொது அறிவுத் திறனை யும் மேம்படுத்த, 38 ஆயிரம் பள்ளிகளுக்கு, கண்கவர் படங்களுடன், நான்கு கோடி ரூபாய் செலவில், புத்தகங்கள் வழங்கப்படும்.
*தொலைதுார மலைப்பகுதியில் உள்ள, 1,000 குடியிருப்புகளில் வாழும், 11 ஆயிரம் குழந்தைகளுக்கு, போக்குவரத்து மற்றும் வழிக்காவலர் வசதி வழங்க, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப் படும்.
*3,500 பள்ளிகளுக்கு, மூன்று கோடி ரூபாய் செலவில், அறிவியல் உபகரணப் பெட்டிகள் வழங்கப்படும். மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலானமாணவர்களுக்கு, 53 லட்சம் ரூபாய் செலவில், இலவச வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்படும்.
*மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு கல்வி போதிக்கும், 175 ஆசிரியர்களுக்கும், தலைமை பண்பை வளர்க்கும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு, 16 கோடி ரூபாய் செலவில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
*அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், தேசிய அளவிலான திறனறி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, 80 லட்சம் ரூபாய் செலவில், சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.
*கடலுார், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலுார், ராமநாதபுரம், நீலகிரி,திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் செலவில், கல்வி சார்ந்த கலை விழாக்கள், திருவிழாக்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படும்.
*மாவட்ட நுாலக அலுவலர் அலுவலகம் மற்றும் பொது நுாலக இயக்ககத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களுக்கு, 18 லட்சம் ரூபாய் செலவில், லேப்-டாப் வழங்கப்படும். கோவை, கரூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விருதுநகர் மாவட்ட மைய நுாலகங்களில், 15 லட்சம் ரூபாய் செலவில், போட்டித் தேர்வு பயிற்சி மையம் துவக்கப்படும்.
*நுாலக உறுப்பினர்கள், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, சென்னை, கன்னிமாரா பொது நுாலகம் மற்றும் 32 மாவட்ட மைய நுாலகங்களில், இலவச இணையதள வசதி ஏற்படுத்தப்படும். மாநகராட்சிகளில் செயல்படும், மாவட்ட மைய நுாலகங்களில், சொந்த நுால்கள் படிக்கும் பிரிவு துவக்கப்படும்.
*ஏழு நடமாடும் ஆலோசனை ஊர்திகள், ஒரு கோடி ரூபாயில் வழங்கப்படும். பத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், 50 லட்சம் ரூபாய்செலவில், மொழி ஆய்வகங்கள் நிறுவப்படும்.
*மாணவர்களுக்கான, புதிய கற்றல் இணையதளம் உருவாக்கப்படும். ஒரு தேர்வருக்கு, ஒரே பதிவெண் மட்டும் வழங்கி, அப்பதிவெண்ணை கொண்டு, பல பருவங்களிலும் தேர்வு எழுதும், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.
*பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைத் தேர்வை, பல பருவங்களில் எழுதி, தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி அடைந்த பின், ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை வழங்கும் திட்டம், நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.
No comments:
Post a Comment