Saturday, 26 September 2015

அரசு இணைய சேவை மையங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி

தமிழக அரசின் இணைய சேவை மையங்கள் மூலம், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி திங்கள்கிழமை (செப்டம்பர் 21) முதல் தொடங்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஆதார் அட்டையைத் தொடர்ந்து, இந்த முக்கிய சேவையை இணைய வழி சேவை மையங்கள் அளிக்கவுள்ளன.
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம், தமிழகம் முழுவதும் இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள்,
54 கோட்ட அலுவலகங்கள், சென்னை- மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சேவை மையங்கள் மூலமாக, தமிழக அரசின் பெரும்பாலான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, ஓய்வூதியத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களுக்கு இந்த இணைய வழிச் சேவை மையங்கள் மூலமாகவே விண்ணப்பிக்கப்படுகிறது. இதுவரை, சேவை மையங்கள் மூலமாக, 13 லட்சத்துக்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள்: மத்திய அரசின் கீழ் செயல்படும் அமைப்பு மூலமாக, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் கருவிழிப் படலம், கைவிரல் ரேகை பதிவுகள் மூலமாக ஆதார் எண்கள் அளிக்கப்படுகின்றன. 
இந்த எண்கள் அடங்கிய விவரங்கள், மத்திய அரசுத் துறையின் மூலமாக நீளமான அட்டையாக வழங்கப்படுகின்றன. இது எளிதில் கிழிந்து விடும் என்பதால், அதே தகவல்கள் அடங்கிய விவரங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் அட்டையை தமிழக அரசின் இணைய வழி சேவை மையங்கள் வழங்கி வருகின்றன. இதுவரை தமிழகத்தில் 4.36 லட்சம் பேருக்கு ஆதார் பிளாஸ்டிக் அட்டை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்றொரு புதிய சேவை: ஆதார் பிளாஸ்டிக் அட்டையைத் தொடர்ந்து, இப்போது கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறையையும் இணைய வழி சேவை மையங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புதிய முறை திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன்படி, தமிழக அரசின் இணைய சேவை மையங்களில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். கடவுச்சீட்டு விண்ணப்பக் கட்டணமான ரூ. 1,500 உடன், இணைய சேவை மையத்தின் பரிமாற்றக் கட்டணமாக கூடுதலாக ரூ. 100 செலுத்த வேண்டி வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கும்போது நாம் தெரிவிக்கும் தேதி, நேரம் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு, அதே தேதி, நேரத்தில் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
இதனால், விண்ணப்பதாரர்கள் இணையதள மையங்களுக்குச் சென்று தவறாக விண்ணப்பித்து, நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்வது தவிர்க்கப்படும் என்று சேவை மைய அலுவலர்கள் தெரிவித்தனர். சேவை மையங்கள் மூலம், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், வேலை தேடி அயல்நாடுகளுக்குச் செல்வோர் விரைந்து சிரமமின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment