நமது கலாசாரப் பெருமைகளை இளம் தலைமுறைக்கு கற்பிக்கும் நோக்கில், நம் பழம்பெரும் இதிசாகங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றையும், ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையையும் பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
நமது கலாசாரப் பெருமைகளை இளம்தலைமுறையினர் உணர வேண்டுமென்றால், ஜாதி, மத பாகுபாடின்றி நம் மாணவர்கள் அனைவருக்கும் ராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை பயிற்றுவிப்பது அவசியமாகும்.
இதனைக் கருத்தில்கொண்டு இவற்றை பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன், எங்கள் அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. பல்வேறு கலாசாரச் சீரழிவுகளால் நம் நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முயற்சி அவசியமாகிறது என்றார் மகேஷ் சர்மா.
இதன் மூலம், மத்திய அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, "உலகமே போற்றிப் புகழும் நமது பாரம்பரிய, கலாசாரப் பெருமைகளை, இளையதலைமுறையினருக்கு கற்பிப்பதில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் எங்கு வந்தது? அப்படியே இருந்தாலும், ஆர்எஸ்எஸ் என்ன தேசத்துக்கு எதிரான அமைப்பா? அதன் சித்தாந்தத்தில் என்ன தவறுள்ளது?' என்று அமைச்சர் கேள்வியெழுப்பினார்.
No comments:
Post a Comment