Friday, 18 September 2015

அரசுப் பள்ளியில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே குட்டலாடம்பட்டி பகுதியில் உள்ளது மலையம்பாளையம் கிராமம். இங்கு செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 14 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.


மலையம்பாளையத்தின் சுற்றுப் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பெரும்பாலும் விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களுமே அதிகம் உள்ளனர். இந்தக் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு தொடக்கப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு நிகராக பள்ளி வாகன வசதி, இசை, நடனம், கராத்தே, யோகா, அடையாள அட்டை எனச் செயல்பட்டு வருவதால், இந்தப் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெற்றோர்- ஆசிரியர் கழக ஏற்பாட்டின்படி, நாள்தோறும் மாணவர்களை வேனில் அழைத்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் சுமார் 14 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஆசிரியர் சு.செந்தில் கூறியது: தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களே இப் பகுதியில் அதிகம். இதனால், இந்தப் பள்ளியில் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களே பயின்று வந்தனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய விழிப்புணர்வு இன்மை, சிறார் தொழிலாளர்கள், இளம்வயது திருமணம், மூடநம்பிக்கை, சுகாதார வசதியில்லாததால் இளம் வயதில் இறப்பு அதிகம் இருந்தது.

2000-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை குறைவு. குடும்ப வறுமை காரணமாக வயல் வேலைக்குச் செல்வது, கால்நடை மேய்க்கச் செல்வது, செங்கல் சூளைகளுக்குச் செல்வது போன்ற பணிகளை மாணவர்கள் செய்து வந்தனர். இந்த நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுத்தப்பட்டதையடுத்து, படிப்படியாகக் குறைக்கப்பட்டது.

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓராசிரியர் பள்ளியில் இருந்து ஈராசிரியர் பள்ளியாகத் தரம் உயர்த்தி, மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், இந்தப் பள்ளி மாணவர்களுக்கு பரதம், கராத்தே, சிலம்பம், யோகா போன்றவை பெற்றோர்- ஆசிரியர் கழக ஏற்பாட்டின்படி சொல்லித் தரப்படுகிறது. மாணவர்களுக்கு அடையாள அட்டை, டை போன்றவை வழங்கவும் பெற்றோர்- ஆசிரியர்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பள்ளி மட்டும் உள்ள நிலையில், குட்டலாடம்பட்டி ஊராட்சியில் மட்டும் விதிவிலக்காக இரு பள்ளிகள் உள்ளன. 2000-ஆம் ஆண்டுகளில் சுமார் 43 பேர் இருóநத நிலையில், தற்போது 105 மாணவியர் உள்பட 223 பேர் உள்ளனர். மொத்தத்தில் இது ஒரு சமுதாய மாற்றம்தான் என்றார்.

No comments:

Post a Comment