Friday, 18 September 2015

தலைமை ஆசிரியர்களுக்கு சி.யு.ஜி., சிம் கார்டு!

கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., எனப்படும், 'குளோஸ்டு யூசர் குரூப்' முறையிலான, மொபைல்போன், 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தேர்வுப் பணிகள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு, இ - மெயிலில் தகவல் அனுப்பப்படுகிறது. அந்த மெயில் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால், தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக, குறிப்பிட்ட சில விவரங்களை விரைந்து சேகரித்து அனுப்புவதில், தாமதம் ஏற்படுகிறது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி., சிம் கார்டு வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இந்த சிம்கார்டைப் பொருத்தியுள்ளவர்கள், தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்ள, கட்டணம் ஏதும் கிடையாது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வித்துறை கேட்கும் தகவல்களை விரைந்து அனுப்ப வசதியாக, பத்து பள்ளிகளுக்கு ஒரு தலைமையாசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட உள்ளார்.
அவர்கள் மூலம், அந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும், குரூப் சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் இந்த சிம் கார்டு இருக்கும். இதன்மூலம் தேர்வுகள், நலத்திட்ட உதவிகள், மற்ற தகவல்கள் தொடர்பாக, அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் விவரம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
எக்காரணம் கொண்டும், மொபைல்போனை, 'சுவிட்ச் ஆப்' செய்யக் கூடாது என, வலியுறுத்தப்படும். சிம் கார்டுக்கான ஆண்டு வாடகை, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து செலுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment