அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், ராஷ்ட்ரிய அவிக்ஷான் அபியான் திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு, அறிவியல் மற்றும் கணினி தொழில்நுட்பத் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800 குழந்தைகளை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர், பழங்குடியினர், ஆதிதிராவிடர், நகர்புறத்தில் நலிவடைந்த குழந்தைகள் என விகிதாச்சார அடிப்படையில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது. தலா 400 மாணவர்கள் வீதம், செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தோட்டக்கலைபண்ணை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், அறிவியல் மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.அரசு பள்ளிகளைச் சேர்ந்த 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment