Wednesday, 30 September 2015

பொள்ளாச்சி அருகே ‘சாதாரண கிராமம் மாதிரி கிராமம் ஆகிறது’: மாற்றம் நிகழ்த்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்

மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து செயல்பட்டால், ஒரு பள்ளி மாதிரிப் பள்ளியாகும். ஆனால் பொள்ளாச்சி ரமணமுதலிபுதூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த கிராமத்தையே மாதிரி கிராமமாக மாற்றி வருகின்றனர். 90 சதவீத துரித உணவுகளை கிராம மக்கள் பயன்படுத்துவதில்லை என்பதே இதற்கு சரியான உதாரணம்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள
கிராமம் ரமணமுதலிபுதூர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மொத்த கிராமத்துக்கே இந்த பள்ளி கல்வியைக் கற்றுத் தருகிறது.
மற்ற கிராமங்களைப் போலவே இங்கும் சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன. ஆனால் கடந்த 2 வருடங்களாக அரசுப் பள்ளி மாணவர்களின் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக தனது இயல்புத் தன்மையிலிருந்து விலகி கிராமம் புதிய பொலிவைப் பெற்று வருகிறது. வருடத்துக்கு ஒரு தலைப்பின் கீழ் கிராமத்தை மேம்படுத்த இந்த பள்ளி மாணவர்கள் முயற்சித்து அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர்.
கிராம மக்களிடம் கேட்டபோது, ‘2014-ம் ஆண்டு துரித உணவுகள் என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 2 மாதங்களுக்கு துரித உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊர்வலம், குறும்படத் திரையிடல், மாற்று உணவு முறைகள் குறித்த கருத்துகளை கூறுவது, பள்ளி வளாகத்திலேயே சிறுதானியம் பயிரிடுவது, சிறுதானிய உணவுத் திருவிழா நடத்துவது, தெரு நாடகங்கள் நடத்துவது என தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனால் எங்களுக்கு துரித உணவுகள் மீதிருந்த மோகம் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது இங்குள்ள 90 சதவீதக் கடைகளில் துரித உணவுகளும், பொட்டல தீணிகளும் விற்பனையே செய்யப்படுவதில்லை’ என்றனர்.
ரமணமுதலிபுதூர் அரசு நடுநிலைப்பள்ளியில், செஞ்சிலுவைச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 46 பேர் கொண்ட மாணவர்கள் குழு, இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிக்காக ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ அமைப்பிடம் விருதினை பெற்றுள்ளது.
அடுத்தகட்டமாக இந்த ஆண்டு, பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற தலைப்பின் கீழ் இந்த மாணவர் குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதில், முதற்கட்டமாக தாங்களே சேகரித்த 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு வழங்கியுள்ளனர். பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தி, அனைவரையும் சில்வர் பொருட்களுக்கு மாற்றியுள்ளனர். அதேபோல கிராமத்தில் உள்ள தேநீர்க் கடைகளிலும், வீடுகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க முயற்சித்து வருகின்றனர்.
மாணவர்களை வழி நடத்திச் செல்லும் ஆசிரியை அனிதா கூறும்போது, ‘கடந்த ஆண்டு மேற்கொண்ட முயற்சி காரணமாக, தன்னார்வ அமைப்பு நடத்திய போட்டியில், தேசிய அளவில் முதல் 100 பள்ளிகளில் எங்கள் பள்ளியும் தேர்வானது. தமிழகத்தில் 29 அரசுப் பள்ளிகள் வெற்றி பெற்றன. அதில் கோவை மாவட்டத்தில் ரமணமுதலிபுதூர் பள்ளிக்கு விருது கிடைத்தது. அடுத்ததாக இந்த ஆண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சியில் இறங்கியுள்ளோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மக்களுக்கு துணிப்பைகளை வழங்கினோம். கிராம மகளிர் 48 பேருக்கு காகிதப்பை தயாரிக்க பயிற்சியும் வழங்கினோம். தற்போது பள்ளி வளாகத்திலும், கிராமத்திலும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, மரங்களை வளர்க்கத் தொடங்கியுள்ளோம். ஊராட்சி இடங்களில் உரக்குழிகள் அமைத்து மக்கும், மக்காத குப்பைகளையும் தரம் பிரிக்க ஆரம்பித்துள்ளோம். பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என அனைவருமே நல்ல ஒத்துழைப்பை கொடுக்கின்றனர். இந்த வருடமும் விருதைப் பெறுவோம். அத்துடன் கிராமத்தையும் மாற்றுவோம்’ என்கிறார் நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment