Friday, 18 September 2015

கைநாட்டு கையெழுத்தாகிறது; அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்

சமுதாய பிரச்னைகளுக்கு, கற்பனைத்திறனால், மாறுபட்ட கோணத்தில், பணிகளை மேற்கொண்டு, தங்கள் திறனை தேசிய அளவில் கொண்டு செல்ல, ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.அரசு சார்ந்த மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் சார்பில், பள்ளி மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்ப்பதற்கும், புதிய சிந்தனைகளை துாண்டும் விதமாகபள்ளி மாணவர்களுக்குபல்வேறு போட்டிகளை நடத்துகிறது.

இவ்வாறு நடத்தப்படும் போட்டிகள் குறித்து பெரும்பான்மையான அரசு பள்ளிகளுக்கு தகவல் அறியப்படுவதில்லை.கல்வித்துறை மற்றும் அரசுத்துறை சார்ந்த போட்டிகளில் மட்டுமே மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை அதிகளவிலான போட்டிகளில் பங்குபெறச்செய்வதனால் அவர்களின் கற்பனைத்திறன் மேம்படுகிறது. இவ்வாய்ப்புகளை அரசுப்பள்ளிகள் தவறவிடுகின்றன.தற்போது, டிசைன் பார் சேஞ்ச் என்ற அமைப்பின் சார்பில், மாணவர்களின் கற்பனைத்திறன் அடிப்படையில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த இரண்டாண்டுகளாகவே இப்போட்டிகள் குறித்து அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான போட்டிவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியின் பங்கேற்பு
இப்போட்டி குறித்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோவையில் விளக்கப்பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியிலும் இப்போட்டியில் பங்கேற்க மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.இப்போட்டியின் மையக்கருத்தே மாணவர்களின் கற்பனைத்திறனைக் கொண்டு, அவர்களின் சுற்றுப்பகுதியிலுள்ள ஒரு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே. இதன் அடிப்படையில், அப்பள்ளி மாணவர்கள், கைநாட்டு கையெழுத்தானது என்ற தலைப்பில் ஒருப்ரொஜெக்டை வடிவமைத்து வருகின்றனர்.

ராகல்பாவி கிராமத்தில் நுாறு சதவீத மக்களுக்கும் கையெழுத்து போட அறிந்திருக்கசெய்வதே இதன் பொருளாகும். இம்முயற்சியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையை எதிர்பார்த்துள்ள நிலையை மாற்றி, பள்ளி வேளைக்கு பின்னர், கிராம மக்களுக்கு கையெழுத்திட கற்றுத்தருகின்றனர்.

இம்மாணவர்கள் இதுவரை ஆய்வு செய்ததில், 87 மக்கள் கையெழுத்திட தெரியாதவர்களாக உள்ளனர். இக்குழந்தைகளின் முயற்சிக்கு கிராம மக்களுக்கும் ஒத்துழைக்கின்றனர். இவர்களது ஈடுபாட்டின் பயனாக தற்போது, 80 சதவீத மக்கள் கையெழுத்திட கற்றுக்கொண்டுள்ளனர்.பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் கூறியதாவது: இப்போட்டியில் ப்ரொஜெக்ட்களை பதிவு செய்வதற்கு அக்., முதல் வாரம் வரையே உள்ளதால், மாணவர்கள் முழுமையான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கற்பனைத் திறனுக்கான போட்டி என்பதால், மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவர்களாகவே முன்வந்து, இவ்வாறு கையெழுத்து போட தெரியாத மக்களுக்கு அதனை கற்பிக்கலாம் என்ற திட்டத்தை கூறினர். மிக உற்சாகத்துடனும், மாணவர்கள் இணைந்தும் கற்றுத்தருகின்றனர்.இதனால் அவர்களின் தலைமைப்பண்பும் மேம்படுகிறது. இதுபோன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த அரசு பள்ளிகள் முன்வர வேண்டும். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த இவை வாய்ப்புகளாகும். போட்டிக்கான விபரங்களை அறிந்துகொள்ளchallenge.dfcworld.com என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment