Sunday, 6 September 2015

போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பட்டியலை திரட்டும் அரசு

பணி நிரந்தரம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் திரட்டி  வருவதால் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசின்  கவனத்துக்கு எடுத்து செல்லும்  வகையில் கடந்த 31ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், எந்தெந்த  பகுதிகளில் யார்? யார்? பங்கேற்றனர் என
உளவுத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தகவல்களை திரட்டி வருகிறது.
ஆர்ப்பாட்டம் நடந்த அன்று பள்ளிக்கு செல்லாத பகுதி ஆசிரியர்கள் பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் கேட்டுள்ளதால், பகுதி  நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த அன்று  பள்ளிக்கு செல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து கோரி உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவே இந்த பெயர் பட்டியல் கேட்டுள்ளதாக கூறுகின்றனர்.
உடல்நிலை சரியில்லாமல், சொந்த விஷயங்களுக்காக விடுமுறையில் சென்றவர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை  எடுத்தால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்களும் பாதிக்கப்படுவர். எனவே முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மெகா வசூலில் ஈடுபட முயற்சி
ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.7,000மாக உயர்த்தப்பட்டது. அப்போது ஒருசில சங்க நிர்வாகிகள் ‘நாங்கள் சொல்லிதான் சம்பளம் உயர்ந்துள்ளது. மேலும், மேலிடத்தை கவனிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் ரூ.1,500 முதல் ரூ.2,000 கொடுக்க வேண்டும். அப்போதுதான் பணி நிரந்தரம் கோரிக்கையை வைக்க முடியும்’ எனக்கூறி வசூல் வேட்டையில் ஈடுபட முயன்றனர். இதுதொடர்பாக புகார் எழவும் வசூல் வேட்டைக்கு தடை வந்தது. தற்போது பணி நிரந்தர கோரிக்கையை முன்வைத்து சிலர் மெகா வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment