Sunday, 6 September 2015

பள்ளிகளில் நன்னெறி கல்வி: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் நன்னெறி கல்வி கற்பித்தலை துவக்கி, மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், 'இதுபற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுஉள்ளது.

மதுரை அண்ணா நகர் ராஜேந்திரன், தாக்கல் செய்த பொது நல மனு:பள்ளிகளில் முன்பு, நாட்டுப் பற்று, கலாசாரம், நீதி, நேர்மையை கற்பிப்பது வழக்கம். இப்போது, நன்னெறி கல்விக்கு (நீதி போதனை) முக்கியத்துவம் தருவதில்லை. பாடத்திட்டத்தில் உள்ளதை கற்பிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். இதனால், சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது.
குற்றங்கள்
நன்னெறி கல்வி இல்லாததால், அனைத்திலும் குற்றம், குறை காணும் தன்மை, மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கத்திய கலாசாரம் நம் சமூகத்தில் ஊடுருவியுள்ளது. இதனால், சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளன. திருமணங்கள், விவகாரத்தில் முடிகின்றன. எந்த திசையில் பயணிப்பது என தெரியாமல் மாணவர்கள் தடுமாறுகின்றனர். சகிப்புத் தன்மை, சமத்துவம் ஏற்பட வேண்டும் என்றால், சமூக மாற்றத்துக்கான கமிஷன் அமைக்க வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் ஆலோசனை மையங்கள் உருவாக்க வேண்டும்.
ஆலோசனை
பள்ளி, கல்லூரிகளில் நன்னெறி கல்வியை, மேற்கு வங்க அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நன்னெறி கல்வி பெயரளவில்தான் உள்ளது. சமூக மாற்றத்திற்கான கமிஷன் அமைத்து பள்ளி, கல்லுாரிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்கும் பணியை துவக்க வேண்டும். ஆலோசனை மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் கூறியிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. 'உயர் கல்வித்துறை செயலர், சமூக நலத்துறை செயலர் ஆகியோர் இந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வழக்கு முடிக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சாமிதுரை ஆஜரானார்.
சமூக மாற்றத்திற்கான கமிஷன் அமைத்து பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்கும் பணியை துவக்க வேண்டும்.

No comments:

Post a Comment