Friday, 15 May 2015

ஜப்பான் ஆய்வகங்களை பார்வையிட செல்லும் 3 தமிழக மாணவர்கள்

விருது பெற்ற பள்ளி மாணவர்களை, ஜப்பான் ஆய்வகங்களை பார்வையிட அனுப்பும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இருந்து, மூன்று மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களை இளம் வயதிலேயே, அறிவியல் பக்கம் ஈர்க்க, புத்தாக்க
அறிவியல் ஆய்வு விருது திட்டம், 2009 - 10ல் இருந்து செயல்படுத்தப்படுகிறது.

கண்காட்சி:

தமிழகத்தில் இத்திட்டத்தை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 32 மாவட்டங்களில், 50 ஆயிரம் மாணவர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் வழங்கி, மாவட்ட, மாநில அளவில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. மாநில கண்காட்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அவர்கள், தேசிய கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது திட்டத்தை, சிறப்பாக செயல்படுத்தும் மாநிலத்திற்கான விருது, 2014 அக்டோபர் மாதம், தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட, நான்கு தேசிய கண்காட்சிகளில், மாநில அளவில், ஒன்பது மாணவர்களும், மண்டல அளவில், இரண்டு மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவர்களில், இந்தியா முழுவதும், 60 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அறிவியலில் மேலும் பயிற்சி பெற, சகுரா பரிமாற்ற திட்டத்தின்படி, ஜப்பானுக்கு, 9ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில், இரண்டு குழுக்களாக, அழைத்து செல்லப்பட உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து, மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் அபுபக்கர், திருப்பூர் மாவட்டம், சுபாஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் விக்னேஷ், சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் யுகவேந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த, மூன்று மாணவர்களும், நேற்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

அறிவியல் கல்வி பயணம்:

உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா ஆகியோர் உடனிருந்தனர். முதல், இரண்டு மாணவர்கள், கடந்த, 9ம் தேதி ஜப்பான் சென்றனர். மூன்றாவது மாணவர், வரும், 16ம் தேதி, ஜப்பான் செல்கிறார். தமிழக மாணவர்களின், அறிவியல் கல்வி பயணத்திற்கு, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

No comments:

Post a Comment