பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,827 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 298 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்கள் எழுதினர்.
இவர்களில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்கள். 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 பேர் மாணவிகள். தனித்தேர்வர்களாக 50 ஆயிரத்து 429 பேரும் தேர்வு எழுதினர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 578 பள்ளிகளில் இருந்து 28 ஆயிரத்து 124 மாணவர்களும், 29 ஆயிரத்து 230 மாணவிகளும் 209 தேர்வு மையங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 291 பள்ளிகளில் இருந்து 9 ஆயிரத்து 703 மாணவர்களும், 9 ஆயிரத்து 856 மாணவிகளும் 48 மையங்களில் தேர்வு எழுதினர்.
அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு, மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
அரசு தேர்வுகள் இயக்குநர் தேவராஜன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் தமிழை முதல்பாடமாக எடுத்து படித்த சென்னை சேலையூர் சியோன் பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 498 மதிப்பெண்கள் பெற்று 192 இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 540 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
இந்த தேர்வில் மாணவர்கள் 90.5 சதவிகிதமும், மாணவிகள் 95.4 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.9 சதவிகிதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
500க்கு500 மதிப்பெண்கள்:
பிறமொழி பாடங்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
சென்னை கரூர் நாமக்கல், தஞ்சை, அரியலூர், புதுச்சேரி, காரைக்கால், பள்ளி மாணவர்களும் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மாணவர்களுக்கு முதல் முறையாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் 29 -ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களே ஜூன் 4-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக மொழிப்பாடம், ஆங்கிலம் ஆகிய இரண்டும் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.305, முதல் தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு உடனடித் துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய பள்ளியிலும் 22-ஆம் தேதி முதல் 27 -ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணம் ரூ.25 பணமாக செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் தவிர பதிவுக் கட்டணமாக ரூ.50 பள்ளியில் செலுத்த வேண்டும். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.
கடந்த 2006-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் கட்டாய கல்வி சட்டத்தின் படி பிற மொழிகளை முதன்மை பாடமாக கொண்டு தேர்வு எழுதும் கடைசி பிரிவு மாணவர்கள் இவர்களே. வரும் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் முதன்மை பாடமாக தமிழ் மொழியில் தேர்வு எழுத உள்ளனர். இதனால் தமிழ் மொழிப்பாடத்தில் 100க்கு100 மதிப்பெண் எந்த மாணவராலும் எடுக்க முடியாது. ஆனாலும் தேர்வுத்துறை இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் முதன் முறையாக மொழிப்பாடத்துக்கு கோடிட்ட தாள்களை அளித்ததால் மாணவர்கள் அழகாக எழுத முடிந்ததாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment