மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.தவிப்பு:ஆண் டுதோறும், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மூன்றாவது வாரத்திலும், பிளஸ் 2வுக்கு, மே நான்காவது வாரத்திலும் வெளியாகும். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை,
மே 19ம் தேதி; பிளஸ் 2வுக்கு மே, 29ம் தேதியும் வெளியிட, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி நேற்று, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், மாணவர் மற்றும் பெற்றோர், நேற்று காலை முதல், சி.பி.எஸ்.இ., அலுவலகத்தில் விசாரித்தபடி இருந்தனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'திட்டமிட்ட தேதியை தாண்டிவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் வெளியாகும். மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான, http://cbseresults.nic.in பார்த்து தெரிந்து கொள்ளலாம்' என்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்ஸ்' என்ற பெயரில், பல போலி இணையதளங்களும் உருவாகியுள்ளன.
இவற்றில் தேர்வு முடிவுகள், 21ல் வெளியாகும் என்றும், 25ல் வெளியாகும் என்றும், பலவித தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் தாமதமாகியுள்ளதால், உயர்கல்விக்கு எங்கே விண்ணப்பிப்பது என்று தெரியாமல், மாணவ, மாணவியர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில், வரும், 29ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வாங்கி, சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இன்னும், குறுகிய காலமே உள்ளது.
எந்த கல்லூரியில்...:
இதேபோல், தமிழகத்தில் பல, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகளே முடிந்துவிட்டன. இதனால், ஐ.ஐ.டி., மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளில் சேர திட்டமிடாத சி.பி.எஸ்.இ., மாணவ, மாணவியர், எந்த கல்லூரியில் என்ன படிப்பில் சேர்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
அண்ணா பல்கலை வசதி:
'சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் தாமதமாகும் பட்சத்தில், அண்ணா பல்கலை கவுன்சிலிங் மூலம், படிக்க விரும்புவோர், விண்ணப்பம் தாக்கல் செய்ய காத்திருக்க வேண்டாம்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ''விண்ணப்பங்களை தாக்கல் செய்ய மே, 29ம் தேதி கடைசி நாள். சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு தாமதமானால், அவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள், தங்கள் விண்ணப்பங்களை மதிப்பெண் குறிப்பிடாமல், தாக்கல் செய்து விடலாம். பின், ரேண்டம் எண் உருவாக்கும் முன், மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை, விண்ணப்ப எண்ணுடன் குறிப்பிட்டு, கூடுதலாகத் தாக்கல் செய்யலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment