Monday, 25 May 2015

பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் எப்படி?மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ!

வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்காக, இரு காப்பீட்டுத் திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டங்களை பயன்படுத்துவது எப்படி, பலன் பெறுவது எப்படி என்ற, குழப்பம் பொதுமக்களிடம் நிலவுகிறது.

*ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், அதற்கேற்ப காப்பீடு செய்ய வேண்டுமா?
*இரு காப்பீட்டுத் திட்டங்களிலும் இணைய முடியுமா என, பல சந்தேகங்கள் உள்ளன.இதற்கு, விளக்கம் அளித்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, விபத்து காப்பீட்டு பாலிசி, பிரதமர் வாழ்க்கை ஒளி காப்பீட்டுத் திட்டம் என, இரு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

விபத்து காப்பீடு: 
வங்கியில் கணக்கு வைத்துள்ள, 17 முதல், 70 வயதானவர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

ஆண்டுக்கு, 12 ரூபாய் பிரீமியத் தொகை. காப்பீடுசெய்த நாளில் இருந்து, 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இக் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டுக் காலத்தில், விபத்து ஏற்பட்டு, உடல் காயம் ஏற்பட்டால், ஒரு லட்சம் முதல், 2 லட்சம் ரூபாய், இழப்பீடு கோரலாம். மரணம் நிகழ்ந்தால், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும். பிரீமியத் தொகையான, 12 ரூபாய், வங்கிக் கணக்கில் இருந்து ஆண்டு தோறும் பிடித்தம் செய்யப்படும். பல வங்கிக் கணக்குகள், ஒருவருக்கு இருந்தால், பல காப்பீட்டு பாலிசிகளை எடுக்க முடியாது. எத்தனை வங்கிக் கணக்குகள் இருந்தாலும், ஒருவருக்கு, ஒரு பாலிசி தான் வழங்கப்படும்.காப்பீட்டுக் காலம் முடிவதற்குள், வங்கிக் கணக்கை ரத்து செய்தால், காப்பீட்டுத் தொகை திருப்பி அளிக்கப்படாது.

பிரதமர் வாழ்க்கை ஒளி காப்பீடு: வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தான் இத்திட்டமும் பொருந்தும். இதற்கான, ஆண்டு பிரீமியத் தொகை, 330 ரூபாய். பிரீமியத் தொகை, வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். வயது வரம்பு, 18 முதல் 50 வயது வரை. இத்திட்டத்திலும், ஒருவருக்கு, ஒரு பாலிசி தான் வழங்கப்படும். ஆனால், விபத்து காப்பீடு மற்றும் வாழ்க்கை ஒளி காப்பீடு இரண்டையும், வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் எடுக்க முடியும்.

இழப்பீட்டுத் தொகை :விபத்துக் காப்பீட்டில் இருந்து இத்திட்டம் மாறுபட்டது. விபத்துக் காப்பீட்டில், விபத்தால் ஏற்படும் இழப்பு, மரணத்துக்கு மட்டுமே, இழப்பீடு அளிக்கப்படும். வாழ்க்கை ஒளி காப்பீட்டுத் திட்டத்தில், விபத்து மற்றும் இயற்கை மரணத்துக்கும், இழப்பீடு அளிக்கப்படும். இழப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாய்.இத்திட்டத்திலும், வங்கிக் கணக்கை பாதியில் ரத்து செய்தால், பிரீமியத் தொகை திருப்பித் தரப்படாது.

இழப்பீடு பெறுவது எப்படி?விபத்தில் படுகாயமோ, மரணமோ நிகழ்ந்தால், அதற்கான முதல் தகவல் அறிக்கை, பாலிசி எண், வங்கிக் கணக்கு எண்ஆகியவற்றை, வங்கியில் செலுத்தி, இழப்பீடு கோரலாம்.இதேபோல், இயற்கை மரணம் அடைபவர்களுக்கு, மரண சான்றிதழ் அளித்து, இழப்பீடு பெறலாம்.
முதலீடு அல்ல:காப்பீடு என்பது, பொதுவாக முதலீடாக கருதப்படுகிறது. அதனால், வருமான வரி விலக்கு உண்டு என கருதுகின்றனர். ஆனால், இந்த இரு காப்பீட்டுத் திட்டங்களும், முதலீடு அல்ல; சமூக பாதுகாப்புத் திட்டங்கள். ஒரு வகையான, மருத்துவக் காப்பீடாகவே கருத வேண்டும்.விபத்துகளும், புதுவகையான நோய்களும் தொடர்ந்து அதிகரித்து வரும், இந்த காலகட்டத்தில், இவ்விரு காப்பீட்டுத் திட்டங்களும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு, மிக அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment: