Monday, 25 May 2015

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் முறைப்படி தேர்வு நடத்தி நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 52 பணியிடங்களுக்கு மே 31ல் தேர்வு நடக்கிறது. இதற்கு 30,002 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக 82 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி.தற்போது இப்பணியிடங்களுக்கு ரூ.5 லட்சம் என நிர்ணயித்து அரசியல் பின்னணியிலுள்ள சிலர் வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் உண்மையாக படித்து தேர்வுக்கு தயாராகும் பலர் இதில் அரசியல் தலையீடு இருக்குமோ என கலக்கத்தில் உள்ளனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளி கல்வியின் தேர்வுத்துறை முதன்முதலில் இதுபோன்ற தேர்வை நடத்துகிறது. பத்தாம் வகுப்பு வரை அறிவியல் மற்றும் பொதுஅறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 52 பணியிடங்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.இதில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பிற்கு 10, உயர் கல்வித்தகுதிக்கு 5, நேர்காணலுக்கு 8 என மொத்தம் 25 மதிப்பெண் வழங்கப்படும். இதில் அதிகம் மதிப்பெண் பெறும் 52 பேர் தேர்வு செய்யப்படுவர். ஒரு பணியிடத்திற்கு ரூ.5லட்சம் வசூல் செய்வதாக எழுந்த புகாரை யாரும் நம்ப வேண்டாம். விண்ணப்பதாரர்கள் யாரிடமும் பணம் கொடுத்தும் ஏமாந்துவிட வேண்டாம். முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடக்கும் என்றார்.

No comments:

Post a Comment