Friday, 29 May 2015

மாட்டு சாணத்தை விற்று படித்து பள்ளியில் முதல் மாணவன் - வறுமையால் படிப்பை தொடர முடியாத நிலை

மாட்டு சாணத்தை விற்று படித்து பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற மாணவன், ஏழ்மை காரணமாக மேற்படிப்புக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி ராஜேந்திரபுரம் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் பி.கணேஷ். பிளஸ் 2 தேர்வில் 1069 மதிப்பெண் (தமிழ்186, ஆங்கிலம்167, கணிதம்190, இயற்பியல்189, வேதியியல்175, உயிரியல்162) பெற்று வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். பிளஸ் 2 ல் தேர்வாகிய மாணவ, மாணவிகள் கல்லூரி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் வேலையில் கணேஷ் தனது பாட்டி நாகுபிள்ளை, 70, யுடன் மாட்டுசாணம் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எருவை விற்றால் தான் வீட்டில் சாப்பிடுவதற்கு அடுப்பு எரியும் என்ற நிலை. இவரது தாய் முருகேஸ்வரி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்தார். சில மாதங்களிலேயே தந்தை பரணிகுமார், வேறொரு திருமணம் செய்து கொண்டு மகனை விட்டு பிரிந்தார். பாட்டி நாகுபிள்ளை, மாட்டு சாணத்தை எருவாக்கி விற்று, கணேசை படிக்க வைத்துள்ளார். பள்ளி முடிந்து பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள் சொல்லும் வேலைகளை செய்ததால் சிறு உதவிகளை பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வில் 473 மதிப்பெண்கள் எடுத்தார். வயதான காலத்தில் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் நாகுபிள்ளையின் ஆதரவி னால் பிளஸ் 2 படிப்பை முடித்தவருக்கு மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இவர் பி.எஸ்சி., வேதியியல் படிக்க விரும்புகிறார். இவரது படிப்புக்கு உதவி கரம் நீட்ட: 99651 38574.

No comments:

Post a Comment