Wednesday, 8 July 2015

பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு:புதிய திட்டம் இன்று அறிமுகம்

பள்ளிகளில் மாணவிகள் சந்திக்கும் பாலியல், ஈவ் டீசிங் போன்ற தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் புதிய திட்டம் திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.

         அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் பள்ளிகளில் தங்களுக்கு ஏற்படும் ஈவ் டீசிங், பாலியல் போன்ற தொல்லைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகார்களை தெரிவிக்க முடியாத நிலையில் உள்ள மாணவிகள் தொடர்ந்து கல்வி கற்கும் சூழலிலிருந்து விலகி செல்லும் நிலை ஏற்படுகிறது.
பள்ளிகளில் தீண்டாமை போன்ற கொடுமைகளால் மாணவர், மாணவிகள் பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது. இதுபோன்ற சூழலில் இருந்து மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
முதல் கட்டமாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகவரியுடன் கூடிய அஞ்சல் அட்டை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் போன்ற தொல்லைகள் குறித்து அஞ்சல் அட்டையில் குறிப்பிட்டு புகார் தெரிவிக்கலாம்.
அவ்வாறு புகார் தெரிவிக்கும் மாணவிகளின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை இத்திட்டத்தை எஸ்.பி. வி. விக்ரமன், கங்கைகொண்டான் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு அஞ்சல் அட்டை வழங்கும் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment