Tuesday, 21 July 2015

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலாம் வகுப்பில் 13,573 பேர் தமிழ் வழிக் கல்வியிலும், 8,067 பேர் ஆங்கில வழிக் கல்வியிலும் சேர்ந்துள்ளனர்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும். ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமையில் பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, பெரும்பாலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறமை (ஸ்போக்கன் இங்கிலீஷ்) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்பட்டது.

இது ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு பயனுள்ளதாக அமைந்தது.இந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழியில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஆங்கில எழுத்தின் சரியான உச்சரிப்பு, ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் அர்த்தம் ஆகியவை அடங்கிய படத்துடன் கூடிய சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.இதன் மூலம், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை மேம்படுவதுடன், மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளரும். இதனால், தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் விளங்குவார்கள்.இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் தனியார் பள்ளி மோகம் தணிந்து, அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களின் பார்வை திரும்பும் என்பது கல்வித் துறையின் நம்பிக்கை.மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விரும்பமும்; அரசுப் பள்ளி மூலம் இது நிறைவேறினால், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்குமுடிவு கட்ட முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

No comments:

Post a Comment