காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடிய அரசு பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்து பள்ளிக் கல்வித்துறை மூலம் பரிசுத் தொகை வழங்கப்பட இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். மாநில அளவில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இவ்விழா கடந்த 15-ம் தேதி அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரால் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. இதில், ஒவ்வொரு
பள்ளியிலும் இவ்விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் வைத்தல், தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல், மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்த வளாகம் ஏற்படுத்த சூளுரைத்தல், மாணவ மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பேச்சுபோட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தபட்டன. எனவே இவ்விழாவை மாநில அளவில் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் கொண்டாடிய பள்ளிகளை தேர்வு செய்து ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் தலைமையாசிரியர்கள் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், வித்தியாசமான முறையில் கொண்டாடிய பள்ளிகளை கல்வித்துறை அலுவலர் குழுவினர் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரமும், நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரமும், தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரமும் ரொக்க பரிசாகவும், பாராட்டு சான்றிதழ் ஆகியவையும் பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்பட இருக்கிறது. இத்தொகையை பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்கு தலைமையாசிரியர்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment