மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் 'இன்பர்மேஷன்கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமி ஆப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு, கடந்த 5 ஆண்டுளாக தமிழக அளவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் சிறந்த கற்பித்தலை வழங்கும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி வருகிறது.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கான போட்டியில், சென்னையை சேர்ந்த டி.ஏ.வி., வேலம்மாள் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 600 பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில்,சிவகாசியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கருணைதாஸ்க்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இதே முதல் பரிசை வென்றுள்ளார் ஆசிரியர் கருணைதாஸ் என்பது கூடுதல்விசேஷம்.இதுபற்றி அவரிடம் நேரில் சந்தித்து பேசினோம்.''என் அப்பா பன்னீர் செல்வம் சிவகாசியில் பிரிண்ட்டிங் ஆபிசில் கூலி வேலைசெய்து என்னை படிக்க வைத்தார். பிளஸ் 2 படிக்கும் வரை எனக்கு கம்ப்யூட்டர் பற்றி கடுகளவு கூட தெரியாது. கடந்த 1997ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சிறப்பாக பயிற்சி பெற்றதற்காக பியர்சன் என்ற நிறுவனம் எனக்கு லேப்டாப் வழங்கியது. அதை பள்ளிக்கு எடுத்து சென்று டேப்லட் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறேன். எனது செயல்பாடுகளை ஃபேஸ்புக் மூலம் அறிந்த நண்பர் பிரசன்னா என்பவர் பள்ளிக்காக ஒரு புரெஜெக்டரை நன்கொடையாக வழங்கினார். அதனால் மாணவர்களுக்கு அதன் மூலம் கம்ப்யூட்டர் வழியாக எளிதில் கற்பிக்க முடிந்தது.சி.டி. மற்றும் டிஜிட்டல் முறையில் பாடங்களை தயாரித்தும், இரு வகுப்புகளைஸ்கைப், கூகுள் ஹேங்கவுட் ஆகியவற்றின் மூலம் இணைத்தும் பாடங்களை சொல்லித்தருகிறேன். இது தவிர இண்டர்நெட் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மாணவர்களின் திறமைகளை மற்ற மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். தனியாக இணைய தள முகவரியை உருவாக்கி அதில் கல்வி சார்ந்த பதிவுகளை பதிந்து வருகிறேன்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சுமார் 50 பேர் ஒரு குழுவாக இணைந்து, கனெக்ட்டிங் கிளாஸ் சிஸ்டம் மூலம் எங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பார்கள். அதுபோல் அவர்கள் பள்ளியில் சிறப்பாக படிக்கும் மாணவர்கள் வெப் காமேரா மூலம் பாடங்கள் சொல்லி கொடுப்பார்கள்.உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டம் அறிவியல் ஆசிரியர் அன்பழகன் என்பவர், இந்திய அரசின் சார்பாக ஜப்பான் சென்றார். அங்குள்ள கல்வி முறையை கேமிராவில் படம் பிடித்து, அதை இண்டர்நெட் மூலம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு சொல்லி விளக்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சாலை அகரம் யூனியன் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் சீனுவாசன், பெருக்கல் வாய்ப்பாட்டை கை விரல்கள் மூலம் எளிய முறையில் கற்றுக்கொள்வது எப்படி ? என கனெக்ட்டிங் கிளாஸ் மூலம் கற்று கொடுத்தார்.எனது பள்ளி மாணவர்களுக்கு எனது இணைய தள முகவரியை கொடுத்துள்ளேன். அதனால் பள்ளி மாணவர்கள் ஏதாவது சந்தேகம் என்றால், அவர்களது சகோதரர்கள் வைத்திருக்கும் லேப்டாப் மூலம் எனக்கு மெயில் அனுப்புவார்கள். சில நேரம் தாங்கள் வரைந்த ஓவியங்களை கூட அனுப்பி வைப்பார்கள். பாடப்புத்தகங்கள் மூலம் கல்வி கற்பதை விட கம்ப்யூட்டர் மூலம் பவர் பாயின்ட் பிரசண்டேஷன், சி.டி.க்கள் மூலம் பாடங்களை கற்றுக்கொடுக்கும் போது எளிதாக அவர்கள் பாடங்களை புரிந்து கொள்கிறார்கள்.எனது ஆசை எல்லாம், தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்கள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர ஓடிவரச்செய்ய வேண்டும்.
சாதாரண நடுத்தர குடும்ப மாணவர்கள் கூட ஸ்கூல் பேக்கிற்கு பதில் லேப்டாப் கொண்டு வந்து கல்வி கற்க வேண்டும்.இதை மனதில் வைத்துதான் உழைத்து வருகிறேன். எனது பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் உள்பட சக ஆசிரியர்களும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்'' என்றார் பெருமிதத்துடன்.இதில் வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால், கம்ப்யூட்டர் மூலம் பாடங்களை கற்பிப்பது தொடர்பாக விருது பெற்றிருக்கும் ஆசிரியர் கருணைதாஸ்சின் பள்ளிக்கூடத்தில் பவர்பாயிண்ட் பிரசண்டேஷனுக்கான ஒரு பிளக்ஸ் போர்டு கூட இல்லை என்பதுதான். பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் பாடங்களை சொல்லி கொடுக்கும் போது வகுப்பு கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி விட்டு காய்ந்து போன வகுப்பின் சுவற்றில், பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்மூலம் பாடங்கள் சொல்லி கொடுப்பதுதான் வேதனையிலும் வேதனை.
No comments:
Post a Comment