Wednesday 26 August 2015

பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

 பள்ளிகளில் திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் நீர்தேக்கப் பள்ளங்கள் இருந்தால் அவற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி ஆகியவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திலுள்ள மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன், குறையிருந்தால் உடனடியாக அதைச் சீரமைக்க வேண்டும்.
 மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் அறிவியல், கணினி ஆய்வகங்களில் அறுந்த நிலையில் அல்லது பாதுகாப்பற்ற நிலையில் மின்சார வயர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பயன்பாடற்ற, சிதிலமடைந்த கட்டடங்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
 பள்ளி வளாகத்தில் உயரழுத்த மின் கம்பிகள் சென்றால் அதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தலைமையாசிரியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையிலுள்ள மரங்களை அப்புறப்படுத்துவதுடன், புதர்களையும் அகற்ற வேண்டும். முக்கியமாக பள்ளிகளில் முதலுதவிப் பெடடி பயன்படுத்தக்கூடிய வகையில் தயாராக இருக்க வேண்டும்.
 மாணவர்களுக்கு அறிவுரை: மழைக் காலங்களில் இடி, மின்னல் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது. 
 பள்ளிகளுக்கு வெளியே உள்ள நீர்நிலைகளுக்கு மாணவர்கள் செல்லக் கூடாது. பள்ளியைவிட்டுச் செல்லும்போது அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகே செல்லக் கூடாது. குளம், குட்டை, கடல் போன்றவற்றில் குளிக்கக் கூடாது என மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் எனவும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment