Wednesday 26 August 2015

கல்விக் கடனுக்காக வங்கிகள் அலைக்கழிப்பு:ஏழை மாணவர்கள் பரிதவிப்பு

வங்கிகள் கல்விக் கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து அலைக்கழிப்பதால், ஏழை மாணவ, -மாணவியர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. தமிழக அரசு, பிளஸ் 2 வரை இலவச கல்வியை வழங்கி வருவதோடு, சீருடை முதல் அனைத்து கல்வி உபகரணங்களையும் இலவசமாக வழங்கி வருகிறது. இதனால், பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவ, -மாணவியர்கள் வறுமை காரணமாக உயர் கல்வியைத் தொடர முடியாத நிலை உள்ளது.



இதனைத் தவிர்த்திட, பிளஸ் 2 முடித்து உயர் கல்வியைத் தொடர்ந்திட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இது வசதி படைத்தவர்களுக்கே பயன்பட்டு வந்ததால், ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.



அதனையொட்டி கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு, உயர் கல்வி தொடர வங்கிகளில் பெறப்படும் 4.5 லட்சம் ரூபாய்க்குள் பெறப்படும் கல்விக் கடனுக்கு, அந்த மாணவரின் கல்வி பருவம் முடியும் வரையிலான காலத்திற்கான வட்டியை அரசே ஏற்கும் என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. இந்த திட்டத்தில், கல்விக் கடன் பெறும் மாணவரின் படிப்பு முடிந்த ஓராண்டிற்கு வட்டி மட்டும் மாணவரே செலுத்த வேண்டும். அதன் பின்னர் தவணைத் தொகை மற்றும் அசலையும் மாணவரே செலுத்த வேண்டும்.



மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் பலர் உயர்கல்வியில் சேர்ந்தனர். குறிப்பாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கடலுார் மாவட்டத்தில் உயர் கல்வியில் மாணவ, மாணவியர் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது.

ஓரிரு ஆண்டுகள் கல்விக் கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டிய வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாக சுணக்கமாக செயல்பட்டு வருகின்றன.

இதனை அறியாமல், மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பலர், வங்கி கல்விக் கடனை நம்பி பொறியியல், மருத்துவம், வேளாண் போன்ற படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்களில் பலர் கல்விக் கடன் கோரி வங்கிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், வங்கி நிர்வாகங்களோ, ஏதேதோ காரணங்களைக் கூறி அவர்களை அலைக்கழித்து வருகிறது.

கடந்தாண்டு வங்கிக் கடனை நம்பி உயர்கல்வி படிக்கச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரை கடன் கிடைக்காததால் பல மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு மூன்றாம் பருவக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.



இதுகுறித்து பொதுமக்கள் பலர் கலெக்டரிடம் முறையிட்டதன் பேரில், அவரும் வங்கியாளர்கள் கூட்டத்தில், கல்விக் கடன் வழங்க முன்னுரிமை அளிக்குமாறு உத்தரவிட்டார். ஆனால், வங்கியாளர்களோ அதனைப் பொருட்படுத்தாமல் உள்ளதால், ஏழை மாணவர்கள் உயர் கல்வியை தொடர முடியாத நிலைக்கு ஆளாகி தவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment