Monday 24 August 2015

45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகள்: இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 சமூகநலத் துறையின் சத்துணவு திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல்
எட்டாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.
 இதன்படி நிகழாண்டில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகள், மாநகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறுபான்மையின நலவாரியப் பள்ளிகளில் படிக்கும் 45 லட்சம் மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கப்படுகிறது.
 இதில், ஆண்டுதோறும் 4 முறை வழங்கும் இலவச சீருடையில், முதல் கட்டமாக 90 லட்சம் இணை சீருடை ஜூன் மாதம் வழங்கப்பட்டது.
 மேலும், 2 இணை சீருடைகளை இந்த மாத இறுதிக்குள் வழங்க சமூகநலத் துறை ஏற்பாடு செய்து வருகிறது.
 இதுகுறித்து சமூகநல ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
 சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 45 லட்சம் மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் இரண்டு கட்டங்களாக 90 லட்சம் இணை இலவசச் சீருடைகள் மாவட்ட கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டன.
 மூன்றாம் கட்டமாக, ஜூலை மாதத்தில் 43 லட்சம் இலவச சீருடைகளை பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர். தற்போது, நான்காம் கட்டமாக, இந்த மாத இறுதிக்குள் 43 லட்சம் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கும் வகையில், கூட்டுறவு மகளிர் தைத்து வருகின்றனர்.
 இலவசச் சீருடைக்காக, துணிநூல் கைத்தறி துறையிடமிருந்து மொத்தமாக பருத்தி, பாலியஸ்டர் துணி ரகங்கள் பெறப்படுகின்றன.
 பிறகு, சரியான அளவுடன் சீருடை அணிந்துகொள்வற்காக, துணி வெட்டும் மையத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 5 சீருடை அளவுகளும், ஆறாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 5 சீருடை அளவுகள் என மொத்தம் 10 அளவுகளில் சீருடைகளை உற்பத்தி செய்கின்றனர்.
 மேலும், பாவாடை, சுடிதார், பேன்ட் ஆகியவற்றுக்கு மெரூன் கேஸ்மாண்ட் துணியும், ஜாக்கெட், மேல்சட்டைக்கு மெரூன் வெளிர் பழுப்புத் துணியும், அரைக்கால், முழுக்கால் சட்டைக்கு மெரூன் டிரில் உள்ளிட்ட துணி வகைகளும் சீருடைகள் தைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
 மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப முழுக்கைச் சட்டை, சிறப்பு மேல்சட்டை உள்ளிட்ட அனைத்து இலவச இணைச் சீருடைகளும் ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்கப்படும் என்றனர்.
 கூட்டுறவு மகளிருக்கு கூலி உயர்வு
 ஆண்டுதோறும் 4 இணை இலவசச் சீருடை வழங்குவதற்காக, 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கூட்டுறவு மகளிர் பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு மகளிர், நாள்தோறும் 3 லட்சம் முதல் 4 லட்சம் சீருடைகள் வரை தைத்துக் கொடுக்கின்றனர்.
 இவர்கள் தைக்கும் ஆடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாதந்தோறும், ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். இதற்காக, 4 ஆண்டுகளில் மட்டும் அரசு ரூ. 288 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டு முதல் கூட்டுறவு மகளிருக்கு 5 சதவீத அளவுக்கு கூலி உயர்வை அரசு வழங்கியது. தற்போதும் 5 சதவீதம் கூலி உயர்த்தப்பட்டுள்ளது.
 1.77 கோடி சீருடைகள்!
 தமிழகத்தில் உள்ள 16 தையல் பயிற்சி மையங்களிலும் மகளிருக்கு ஆண்டு முழுவதும் தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பெண்கள் தையல் பயிற்சி முடித்த பிறகு, சுய வேலைவாய்ப்பு பெறுவதுடன், கூட்டுறவுச் சங்கங்களிலும் வேலை பார்க்கின்றனர். இதன்மூலம், கூட்டுறவு மகளிர் ஆர்வமுடன் இலவசச் சீருடை தைத்துக் கொடுப்பதுடன், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்கின்றனர்.
 நிகழ் கல்வியாண்டில் 45.57 லட்சம் குழந்தைகளுக்கு 1.77 கோடி சீருடைகள் தேவைப்படும் நிலையில், இலவசச் சீருடைகளை கூட்டுறவு மகளிர் 5 மாதங்களில் விரைந்து தைத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment