Monday, 6 April 2015

கற்றல் குறைபாடு உடைய குழந்தைகள் யார்?

சிறப்பு பள்ளிகள் என்றால், மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் என்றே பலரும் நினைக்கிறோம். ஆனால், நல்ல மனநிலையும், அதீத சிந்திக்கும் ஆற்றலும் கொண்ட பல குழந்தைகள் கூட, படிப்பை வேப்பங்காயாக பார்க்கும். அந்த குழந்தைகளும் சிறப்பு குழந்தைகள் தான். காரணம் என்ன?
அவர்களுக்காக, முகப்பேர் கிழக்கு, ஜெ.ஜெ.நகரில், 'ஸ்ருஷ்டி' சிறப்பு பள்ளி நடத்திவரும், மனநல ஆலோசகர் எஸ்.தேன்மொழி கூறியதாவது:
ஆறு வயதுக்குள்ளான குழந்தைகள், தரமான பள்ளியில் படித்த போதிலும், மற்ற குழந்தைகளைவிட, எழுத்துகளையோ, எண்களையோ புரிந்துகொள்வதில் சிரமப்பட்டாலோ, புரிந்துகொள்ளாமலோ இருந்தால், அதற்கு வளர்ச்சி குறைபாடு இருப்பதாக அர்த்தம். அந்த குறைபாட்டின் தன்மையை ஆராய்ந்தால், எளிதில் சரிப்படுத்திவிட முடியும். கற்கும் குறைபாட்டிற்கு, மரபியல், பிறப்பு, வளர்ச்சி, பார்வை, கேட்டல் குறைபாடுகளில் ஏதேனும் ஒன்றோ, பிறவோ காரணங்களாகவோ இருக்கலாம். குழந்தை பிறக்கும் போது, பனிநீர் குடித்தல், அழாமல் இருத்தல் போன்ற காரணங்களால், நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு, அதன் மூலம் மூளையின் சில பகுதிகளுக்கு, ரத்த ஓட்டம் தடைப்படும். 
அதனால், மூளையின் வளர்ச்சி தற்காலிகமாக பாதிக்கப்படும். இவ்வாறு அரைமணி நேரம் வரை பாதிப்பு நீடிக்கும் குழந்தைகளுக்கு, கற்றல் குறைபாடு, இயக்க உறுப்புகளின் குறைபாடு, நரம்பியல் குறைபாடுகள் தோன்றும். 
அதனால், கவனித்தல், ஒன்றுதல், அதீத சுறுசுறுப்பு, 'ஆட்டிசம்' போன்றவற்றால் படிப்பில் தேக்க நிலை 
ஏற்படும். சிலருக்கு, 6- 9, ஆங்கில பி, டி எழுத்துக்கள் போன்றவற்றின் இடையே, வித்தியாசம் தெரியாது. அதனால் ஏற்படும் குழப்பத்தால் செய்யும் தவறுகளை பார்க்கும் ஆசிரியர்கள், முக பாவனை, வார்த்தைகளால் புறக்கணிப்பர். பெற்றோர், குறைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவர், அல்லது ஒதுக்குவர்.
இப்படிப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கை இழந்தோ, குறைசொல்வோர் மீது கோபத்துடனோ, பயத்துடனோ 
பழகுவர். அதனால், அந்த குழந்தைகளின் திறமைகள் வெளியே வராமல் மறைந்து போவதோடு, தன் குறையை மறைக்க, மற்றவர்களை தன் பக்கம் ஈர்க்க முற்படும். அதன் விளைவாக, திருடி நண்பர்களுக்கு செலவழித்தல், பொய் சொல்லுதல், பின் தண்டனை பெறுதல், தண்டிப்பவரை பழிதீர்த்தல் உள்ளிட்ட குற்றச்
செயல்களை புரிய முற்படுவர்.இவ்வளவு குற்றங்களையும் அவர்கள் புரிவதற்கான முதல் குறைபாடு, கற்றல் குறைபாடு. அதனை பெற்றோரும், ஆசிரியரும் உணர்ந்துகொண்டு, மனநல ஆலோசனை, பேச்சு, இயன்முறை பயிற்சிகள் மூலம் தீர்வு அளிக்கலாம். 
அவர்களுக்கு, ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ சிறப்பு பள்ளியில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்கலாம். அவர்களின் மூளை பகுதி வளர்ச்சியடைந்து, தன்னம்பிக்கை ஏற்பட்ட பின், சாதாரண பள்ளிகளில் சேர்க்கலாம். ஆனால், பல பெற்றோர், தன் குழந்தையை சிறப்பு பள்ளியில் சேர்த்தால், மற்றவர் ஏதேனும் சொல்வர் என்ற காரணத்தால், சேர்க்க முற்படுவதில்லை. இதன் விளைவாக, குழந்தைகள் பதின்பருவத்தில் பெரிதும் பாதிக்கப்படுவர். 
விழிப்புணர்வு இல்லைஅரசு பள்ளிகளை பொறுத்தவரை, பலவித சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், கற்றல் குறைபாடுடைய குழந்தைகளை அடையாளம் காணக்கூடிய ஆசிரியர் பணியிடங்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லை. இதுகுறித்து, ஆசிரியர், பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதனால், பலர் எட்டாம் வகுப்புக்கு பின், பள்ளி படிப்பை நிறுத்தி விடுகின்றனர். அதனை தவிர்க்க, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் கற்றல் குறைபாடு சார்ந்த விஷயங்களை, தகுந்த பயிற்சியாளர்கள் மூலம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 94440 10099

No comments:

Post a Comment