Posted: 23 Apr 2015 04:34 AM PDT
சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.
பெண் குழந்தைகளை காப்பாற்றும் திட்டங்களை செயல்படுத்திய சிறந்த மாவட்ட ஆட்சியர் என பிரதமர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆட்சியர் தாரேஸ் அகமதுவின் அணுகுமுறையும், திட்டங்களை செயல்படுத்தும் முறையும் ரொம்ப வித்தியாசமானது. பொதுவாக ஆட்சியர் வருகையென்றால் அதிகாரிகளும், மக்களும் பரபரப்பாகி விடுவார்கள். ஆனால், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது வருகிறார் என்றால் பள்ளி குழந்தைகள் முதல் பாமர மக்கள் வரை எல்லோரும் அவருக்காக காத்து கிடப்பார்கள்.
மக்களின் மனதில் இடம்பிடித்து, விருதுக்கும் தேர்வாகியுள்ள தாரேஸ் அகமது அப்படி என்னதான் செய்தார் என அவரது பணிகளை அலசினோம்.
பெண் குழந்தைகளின் கல்வி
கடந்த நான்கு வருடத்திற்கு முன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதிலிருந்து, இன்று வரை துளியளவும் ஆர்வம் குறையாமல், எளிமையான அணுகுமுறையால் மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ள இவர், கிராமங்களிலும் சர்வசாதாரணமாக வலம் வருகின்றார்.
இவர் தலைமையிலான சமூக நலத்துறை அலுவலர் குழு, இதுவரை 450க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தடுத்துள்ளது. இதில் ஒரு மதத்தைச் சேர்ந்த திருமணத்தை தடுத்ததற்காக தாரேஸ் அகமதுக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தினர். அப்போதும் கூட, பெண் குழந்தை என்றால் எல்லா குழந்தைகளும் ஒன்றுதான். திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு மட்டுமே திருமணம் செய்ய அனுமதி என மிக கடுமையாக நடந்து கொண்டார்.
குழந்தை திருமணங்களை தடுத்த கையோடு பெண் பிள்ளைகளை அழைத்து, அவர்களுக்காக சிறப்பு தங்கும் இடங்களை ஏற்படுத்தி, படிக்க ஏற்பாடுகள் செய்தார். இதில் சில பெண் குழந்தைகள் இப்போது பொறியியல் உள்ளிட்ட கல்லூரியில் சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலேயே முதன் முதலில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் எனும் வாசகங்களை ஓங்கி ஒலித்தபடி பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதோடு அந்த போட்டிகளில் இவரும் கலந்துகொண்டு ஓடியதை பெருமையாக சொல்கிறாரகள் இளைஞர்கள்.
அரசு பள்ளிகளின் வளர்ச்சி
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை வளர்த்தெடுக்க திட்டமிட்ட தாரேஸ் அகமது, சூப்பர் 30 எனும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மிகசிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சியில் படித்த மாணவர்கள், தற்போது மருத்துவக்கல்லூரி, அண்ணா பல்கலைகழகங்களில் படித்து வருகிறார்கள்.
இந்த சாதனைக்கு மக்களிடம் உண்டான வரவேற்பை அடுத்து சூப்பர் 30 திட்டத்தில், தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறாரகள். அலட்சியமாக வேலை செய்யும் அரசு ஆசிரியர்களை அலர்ட் செய்ய வைத்திருக்கிறார் ஆட்சியர் தாரேஸ் அகமது. இதனால் பெரம்பலூரின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம், ஒவ்வொரு வருடமும் 26 சதம் வரை அதிகரித்துள்ளது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள்,
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க சிகரம் எனும் திட்டத்தையும் அரசு பள்ளிகளில் செயல்படுத்தும் இவர், பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கே சென்றாலும் ஒரு பள்ளியின் ஒட்டு மொத்தச் செயல்பாட்டை தெரியப்படுத்த பச்சை, மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட ஆறு நிறங்களில் பள்ளியின் செயல்பாட்டை வேறுபடுத்தி காட்டுகிறார். சில பள்ளிகளில் ஆய்வு செய்யுபோது இவரே பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி சோதனை செய்யும் சம்பவங்களும், குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளரும் என தான் சந்திப்பவர்களுக்கு பாடம் எடுக்கும் சம்பவமும் பாராட்டை பெற்று வருகிறது.
இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் முறையாக நடத்தி, மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும் வரை கண்காணிக்க ஒரு குழு அமைத்திருக்கிறார். இந்த சீரிய முயற்சியில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள் என புள்ளி விபரங்களை அடுக்குகிறார்கள்.
மாவட்டத்தில் போடப்பட்ட சத்துணவு பணியாளர்கள் தேர்வில் பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என முறையாக தேர்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்களில் தாரேஸ் அகமதுவும் ஒருவர்.
விவசாயிகளின் தோழன்
பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் போராட்டம் அறிவிக்க, கொஞ்சம் பொறுங்க என போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தி, கோயமுத்தூர் பருத்தி ஆராய்ச்சி மையத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து வந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் உரிய விலை கிடைக்க வைத்ததாக சந்தோசமாக பகிர்ந்து கொள்கிறார்கள் விவசாயிகள். இதுமட்டுமல்லாமல், விவசாய பிரச்னைகள் என தகவல் வந்தால் அதை தீர்த்தபிறகுதான் அடுத்த வேலை செய்வார். விசுவக்குடி நீர்தேக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை சம்பந்தப்பட்ட திட்டங்கள் தமிழக அரசிடம் இவர் பெற்றுக்கொடுத்த திட்டங்களே.
மக்களின் உணர்வுகளை முழுமையாக உணர்ந்தவராகவும், மக்களோடு மக்களாக பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்து அவர்களின் தேவைகளை உணர்ந்து, அதற்கான தீர்வை உருவாக்கி வருகின்றார். ரேசன் கார்டு கிடைக்காமல் பலர் தடுமாறிக் கொண்டிருந்ததை கேள்விப்பட்டு மாதாமாதம் ரேசன் கார்டுகள் பெற முகாம் நடத்தி, அந்த பிரச்னைகளை தீர்க்க வழிவகை செய்தவர்.
மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு சொந்த பணத்தில் பஞ்சு மெத்தை வழங்கியதும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ததும் மாவட்டம் முழுக்க எதிரொலிக்கிறது.
ஆண்டுதோறும் பெரம்பலூரில் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டு அதில் மக்கள் ஆர்வமாக பங்கேற்க இவர் செயல்பட்ட விதத்தை வாசகர்கள் சொல்லி சிலாகித்து போகிறார்கள்.
தொடரும் விருதுகள்
தமிழகத்தின் சிறந்த ஆட்சியர்களுக்கான தகுதியை, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தக்கவைத்த தாரேஸ் அகமது, கடந்த ஆண்டும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் மின் ஆளுமை திறனுக்கான விருதும், மாற்றுத்திறனாளிகளை சிறப்பாக ஊக்கப்படுத்தியதற்காக 10 கிராம் தங்க நாணயமும், ஆட்சியரின் விருப்ப நிதியாக ரூ.25 ஆயிரம் பரிசும் முன்னாள் முதல்வரிடம் பெற்றார்.
கடந்த டிசம்பர் இறுதியில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.களுக்கான மாநாடு நடந்திருந்தால் இந்த வருடமும் விருது கிடைத்திருக்கும். ஆனால், மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில்தான் பெண் குழந்தைகளை பாதுகாத்த மாவட்ட ஆட்சியர் எனும் பிரதமர் விருதை டெல்லியில் இன்று பெறுகிறார் தாரேஸ் அகமது.
'இது தனிப்பட்ட நபரின் சாதனையல்ல, என்னோட உத்தரவை மதித்து பல அதிகாரிகளின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்' என மிக அடக்கமாக சொல்லிவிட்டு டெல்லி சென்றிருக்கிறார் தாரேஸ் அகமது.
"நாமும் வாழ்த்துக்கள் சொல்வோம்!"
No comments:
Post a Comment