Monday, 6 April 2015

அசத்தும் 6வயது சிறுவன்: ஆசிரியர்கள் பாராட்டு:

பொள்ளாச்சி அருகே ஆறு வயது சிறுவன், 100 திருக்குறள், மாவட்டங்களின் பெயர், மாநிலத்தின் தலைநகரம் என எதைக்கேட்டாலும் அடுத்த நொடியே சொல்லி அசத்தி வருகிறான்.  ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்து இருக்கிறது; வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகாதது; தன்னம்பிக்கையின்மை, திறமையை வெளிப்படுத்த தயக்கம் போன்ற காரணங்களினால், தங்களது திறமைகளை தங்களுக்குள்ளேயே புதைத்து வைத்து விட்டு வாழ்க்கையினை நகர்த்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களது திறமைகளை கூச்சப்படாமல் வெளிப்படுத்தி சாதனை படைக்கின்றனர்.
தற்போது பிறக்கும் குழந்தைகள், சுட்டியாக இருப்பதுடன், ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கி சாதனை படைத்து வருகின்றனர். அதில் ஒருவர் தான், பொள்ளாச்சியை சேர்ந்த நிஷாந்த் ராஜ். பொள்ளாச்சி அருகேயுள்ள ஜமீன் முத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், அன்னலட்சுமி தம்பதியின் மகன் நிஷாந்த்ராஜ்,6.

இவர் பொள்ளாச்சி ஏ.ஆர்.பி.,இன்டர் நேஷனல் பள்ளியில், முதலாம் வகுப்பு படித்து வருகிறார். சிறிய வயதிலேயே இருந்து தங்களது பெற்றோர் திருக்குறளை சொல்லித்தந்ததாலோ, அதன் மீது தீரா பற்று கொண்டு படித்து வருவதுடன், பார்க்காமல் 100 குறள் வரை சொல்கிறார். 
பல்லடத்தில் யு.கே.ஜி., படிக்கும் போது, 50 குறள் பார்க்காமல் சொல்லி பரிசுகளை தட்டிச் சென்ற இச்சிறுவன், அதற்கு பின்னும் குறள் படிப்பதை தொடர்ந்துள்ளான். திருக்குறளிலுள்ள அனைத்து அதிகாரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சிறுவன் தெரிவித்தார். இதுதவிர, 32 மாவட்டங்கள், ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரம் குறித்து கேட்டால் உடனடியாக பதில் வருகிறது. இது மட்டுமின்றி, ஓவியம் வரைதல், செஸ் போட்டிகளில் ஆர்வம் என அவனது திறமைகளை வளர்த்துக்கொண்டு வருகிறார்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறியதாவது: துவக்கத்தில், அவனுக்கு திருக்குறளை சொல்லித்தரலாம் என முடிவு செய்தோம். இதற்காக, 2 வயது முதலே அவனுக்கு குறளை சொல்லித்தந்தோம். ஒரு முறை சொன்னால் போதும் அதை அப்படியே மறக்காமல் சொல்லுவான். எனவே, திருக்குறள் கற்கும் ஆர்வத்தை கண்டதும், குறளை தினசரி சொல்லித்தருகிறோம். இது தவிர விளையாட்டு உள்ளிட்ட மற்ற திறமைகளையும் வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த மொழியில் கல்வி பயின்றாலும், தமிழ் மொழியை மறக்க கூடாது என்பதற்காகவும், மொழியின் பெருமையை அவனுக்கு உணர்த்தி வருகிறோம்.மேலும், நிஷாந்தினை படிக்க வேண்டும் என திணிக்காமல், படிக்க விருப்பம் இருக்கிறதா என பார்த்து படிக்க வைத்தது அவன் சாதனை படைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. 1,336 திருக்குறளையும் கற்றுக்கொடுங்கள் என ஆர்வமாக கேட்கிறான். எதையும் ஒரு முறை சொன்னால் போதும், தனது தனித்திறமையால் புரிந்து அதை அப்படியே செய்து காட்டுகிறான்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

No comments:

Post a Comment