Monday, 13 April 2015

Online BANKING - போலி ‘மொபைல் ஆப்ஸ் !!! உஷார்...

ஸ்மார்ட் போன் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, இதன்மூலம் வர்த்தகநடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மொபைல் அப்ளிகேஷன் மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவித்து வருகின்றனர். ஆனால், பொழுது போக்கு அம்சமாக பயன்படுத்துவதை விட வங்கி கணக்குகளை பார்ப்பது மற்றும் பண பரிவர்த்தனைக்கு மொபைல்போன்களை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து பாரத ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அவ்வப்போது எச்சரித்து வந்துள்ளது.

ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘வங்கி கணக்கில் இருப்பு விவரம் சரிபார்க்கும் எண்கள் அடங்கிய மொபைல் அப்ளிகேஷன் (ஆல் பேங்க் பேலன்ஸ் என்கொயரி நம்பர்) அப்ளிகேஷன் இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. இது ரிசர்வ் வங்கி முத்திரையுடன் அமைக்கப்பட்டுள்ளது. சில வங்கிகளின் இருப்பு எண் சரிபார்க்கும் மொபைல் எண்கள் மற்றும் கால்சென்டர் எண்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கி இதுபோன்ற அப்ளிகேஷனை உருவாக்கவில்லை. எனவே பொதுமக்கள் இத்தகைய அப்ளிகேஷனை பயன்படுத்தினால் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாவார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களில் பயன்பாடு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8.1 கோடி மொபைல் போன்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகியுள்ளன. இங்கு ஸ்மார்ட் போன் எண்ணிக்கை காலாண்டுக்கு 51 சதவீதம் அதிகரிக்கிறது. ஊரக பகுதிகளில் மட்டும் சுமார் 41 கோடி பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சைபர் தாக்குதல்: இந்தியாவில் பயன்படுத்தப்படும் 90 சதவீத மொபைல் அப்ளிகேஷன்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்களும், சில மொபைல் அப்ளிகேஷன்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கை செய்து வருகின்றன. ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துபவர்களும் ஸ்மார்ட்டாக இல்லாவிட்டால் ஆபத்து நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை.
நேரடி கண்காணிப்பு தேவை
ஸ்மார்ட்போன்களில் ஆண்டிராய்டு இயங்குதள மொபைல்களுக்கான அப்ளிகேஷன்கள் ஏராளமாக உள்ளன. இதை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் வங்கி பரிவர்த்தனைகளை மொபைல் மூலமாகவே மேற்கொள்கின்றனர். தனியார் வங்கிகள் அனைத்து வங்கி சேவையும் கிடைக்கும் வகையில் அப்ளிகேஷன்களை உருவாக்குகின்றன. 
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சில வங்கிகள் தாங்களே மொபைல் அப்ளிகேஷன்களை உருவாக்கி வெளியிடுகின்றன. இதனால் பாதகம் இல்லை, ஆனால் யாரோ உருவாக்கிய மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தினால் தகவல் திருடப்பட்டு பணம் இழக்கும் அபாயம் உள்ளது. சைபர் தாக்குதல், தகவல் திருட்டு, மோசடிகள் அதிகம் நடப்பதால் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். வங்கிகளும் நேரடி கண்காணிப்பில் அப்ளிகேஷன்உருவாக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment