Friday, 24 April 2015

மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம்: தமிழக அரசு விளக்கம்:

மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கருவூல கணக்குத் துறை இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒவ்வொரு நிதியாண்டிலும் ஓய்வூதியதாரர்கள் மார்ச் முதல் பிப்ரவரி வரையில் ஓராண்டு வரை பெறும் மொத்த ஓய்வூதியத்தின் மீது வருமான வரி கணக்கிடப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதியம், முதலீடுகள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே தெரிவிப்பதற்கு வசதியாக கருவூலக் கணக்குத் துறை ஒரு படிவத்தை வடிவமைத்துள்ளது.

இந்தப் படிவத்தை www.tn.gov.inkaruvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்-கருவூலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக, ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதிய விவரம், பிடித்தங்கள், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிகர ஓய்வூதியம் ஆகிய விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், தேவையான விவரங்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்-கருவூல அலுவலரிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
வருமான வரி பிடித்தத்துக்கு உள்படும் ஓய்வூதியதாரர்கள் தங்களது நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்-கருவூல அலுவலருக்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். வருமான வரி சட்டத்தின் கீழ், தகுதியான முதலீடுகளுக்கு உரிய சான்றுகளை அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வருமான வரி அதிகளவு பிடித்தம் செய்யப்படாமல் உரிய வரி மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு செய்வதற்கு உரிய முதலீடுகளுக்கான சான்றுகளை ஜனவரி மாதத்துக்குள் அளிக்க வேண்டும்.
குறித்த காலத்துக்குள் அளிக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கும் அலுவலர்கள், தங்களிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே வரிகளை பிடித்தம் செய்வர். கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டால் அது ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் திருப்பி வழங்கப்படாது. வருமான வரி செலுத்தும் ஓய்வூதியர்கள், www.incometaxindiaefiling.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களது வரி வரவு அட்டவணையை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம் என்று கருவூலத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment