Friday, 8 May 2015

17 புதிய மருத்துவ கல்லூரிகள்: மத்திய அரசு அறிவிப்பு

''நாட்டில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்படும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டா லோக்சபாவில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:நாடு முழுவதும் மக்களுக்கு, ஆரோக்கிய பராமரிப்பு வசதிகள் கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசுகளுக்கு வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது. அதன் அடிப்படை யில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டவும், 70 மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும், திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில், 22 மாவட்ட மருத்துவமனைகளின் மேம்பாட்டு திட்டங்களும் அடங்கும். தேசிய ஆரோக்கிய திட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் ஆரோக்கிய பராமரிப்பு திட்டங்களுக்கு, இலவச மருந்துகள், பரிசோதனை வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இத்துடன், 'ராஷ்ட்ரிய ஸ்வஸ்தியா பீமா யோஜனா' திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரையில், குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை வசதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு, 'இலவச ஆரோக்கிய அட்டை' வழங்கப்படுகிறது. இது, படிப்படியாக, அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment