Wednesday 27 May 2015

ஒரு ரூபாய் டீச்சர்!

    ‘மிஸ் எனக்கு இந்தப் பாடத்தை சொல்லிக் கொடுங்களேன்’ என ஒரு மாணவன் கேட்க, அவனுக்குத் தெருவிளக்கு வெளிச்சத்தில் பாடம் எடுக்கிறார் அவர். திருச்சி, ஶ்ரீநிவாசா நகர், 3-வது தெருவில் சுமார் 70 மாணவர்களுக்கு இப்படி தெருவிளக்கு வெளிச்சத்தில் டியூஷன் எடுத்துக்கொண்டிருப்பவர்... ‘கோமதி மிஸ்’!
       
  ‘‘திருச்சியில இருக்குற பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில தேர்வு நெறியாளர், அலுவலக கணக்காளரா இருக்கேன். குடிசைப்புற மக்கள் பெரும்பாலும் தங்களோட பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்பி படிக்க வைக்க வசதி இல்லாதவங்க. அதனால பள்ளியில படிப்புல பின்தங்கி, படிப்புல ஆர்வமில்லாம போய், பாதியில விட்டுட்டு கூலி வேலைக்குப் போய், இன்னும் சிலர் ஃபெயிலாகிட்டா வீட்டுல திட்டுவாங்கனு வீட்டை விட்டே ஓடிப்போய்னு... நிறைய பிரச்னைகள். இதுக்கெல்லாம் ஒரே தீர்வு, குடிசைப் பகுதி மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பு எடுக்கிறதுதான். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2003-ல் இந்த சேவைக்காக எனக்கு அழைப்பு விட்டப்போ, மனசார இந்தப் பணியில என்னை ஈடுபடுத்திக்கிட்டேன்’’ என்று பெருமையோடு சொன்ன கோமதி, தொடர்ந்தார்.
         ‘‘மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இடம் இல்லாததால, இந்த 11 வருஷமா தெருவிளக்கு வெளிச்சத்துலதான் டியூஷன் எடுத்துட்டு இருக்கேன். மழைக்காலம் வந்துட்டா அக்கம்பக்கத்துல ரெண்டு வீடுகளில் அனுமதி வாங்கி, அங்கே போயிடுவோம். இதுவரைக்கும் 1,000 மாணவர்களுக்கு மேல டியூஷன் எடுத்திருப்பேன். என்னோட ஃபீஸ், ஒரு மாணவனுக்கு ஒரு மாசத்துக்கு ஒரு ரூபாய். தன்னார்வத் தொண்டு நிறுவனம் எனக்கு வழங்கும் 1,000 ரூபாயை மாணவர்களுக்கான நோட்டு புத்தகங்கள் மற்றும் பரிசுப்பொருட்களுக்காக செலவழிச்சிடுவேன்!’’ என்று சொல்லும் கோமதியிடம், எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கிறார்கள்.
         ‘‘இன்னிக்கு எங்கிட்ட படிக்கிற மாணவர்கள் நல்ல நிலைமைக்கு வரணும் என்பதோட, நாளைக்கு அவங்க ஒரு நாலு பேருக்கு பாடம் சொல்லிக் கொடுத்தா, அல்லது அதுக்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தா, அதுதான் எனக்குப் பெரிய சந்தோஷமா இருக்கும். இப்போ நாங்க எதிர்பார்க்கிற ஒரே உதவி... மழைக்கு ஒதுங்க எங்களுக்கு ஒரு கட்டடம் கிடைக்குமா என்பதுதான்!’’
- தெருவிளக்கில் மின்னுகின்றன ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கண்கள்!

No comments:

Post a Comment