Monday 25 May 2015

இனி மொபைல் போனில் எஸ்.டி.டி., தொல்லை இல்லை: '0' போடாமல் இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம்

தேசிய தொலைத்தொடர்பு கொள்கை, 2012ன் படி, மொபைல் போன்களுக்கு, 'ஒன் இந்தியா ஒன் நம்பர்' என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மொபைல் போன்களுக்கு, எஸ்.டி.டி., 
வசதி அளிக்கும், 'ரோமிங்' முழுமையாக நீக்கப்படுகிறது. நாட்டின் எங்கு சென்றாலும், மொபைல் போனிலிருந்து, '0' போடாமல் பிற பகுதிகளுக்கு எளிதாக தொடர்பு கொள்ளலாம்' என, தனியார் மொபைல் போன் ஆபரேட்டர்கள் கூறியுள்ளனர்.

தற்போதுள்ள திட்டப்படி, மொபைல் போன் பதிவாகி உள்ள, தொலைத்தொடர்பு வட்டத்துக்குள் மட்டுமே, 'ரோமிங்' வசதி இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும். உதாரணமாக, தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் பதிவு செய்யப்பட்ட, மொபைல் போன் எண்ணிலிருந்து, இந்த வட்டத்துக்குள் பதிவாகியுள்ள, மொபைல் போன் எண்களுக்கு மட்டுமே, ரோமிங் வசதி இல்லாமல் பேச முடியும்.


முழுமையாக ரத்து:

தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் இருந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற தொலைத் தொடர்பு வட்டப் பகுதிகளுக்கு, செல்லும்போது, ரோமிங் வசதி இருந்தால் தான், அந்த வட்டத்துக்குள், தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட மொபைல் எண் பதிவாகி, பேச முடியும். ரோமிங் வசதி என்பது, மொபைல் எண்ணுக்கு முன், '91' என சேரும். அதேபோல், தரை வழி போனில் இருந்து, தொடர்பு கொள்ளும்போது,
'0' சேர்த்து தொடர்பு கொள்ள வேண்டும்.



'ஒன் இந்தியா ஒன் நம்பர்' :

திட்டப்படி, '91', '0' ஆகியவற்றை சேர்க்காமல், நேரடியாக மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம், ரோமிங் வசதி முழுமையாக ரத்து செய்யப்படும். தனியார் மொபைல் போன் ஆபரேட்டர்கள் பலர், ரோமிங் வசதியை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ஜூலை வரை, இதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.


அரசாணை:

இதுபற்றி, பி.எஸ்.என்.எல்., நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய தொலைத் தொடர்பு கொள்கைப்படி, 'ஒன் இந்தியா ஒன் நம்பர்' என்ற பரிந்துரையை, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அளித்துள்ளது.இப்பரிந்துரையை,
தொலைத் தொடர்புத் துறை, 2014நவம்பரில் ஏற்றுக் கொண்டது. எனவே, மொபைல் போன்களுக்கு, எஸ்.டி.டி., வசதி அளிக்க, '91', '0' ஆகிய முன் எண்களை ரத்து செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கான, அரசாணை விரைவில் வெளியாகும். இவ்வாறு, அவர் கூறினார்.


பலன் என்ன?

ரோமிங் வசதி அமலில் இருந்தால், தொலைத் தொடர்பு வட்டங்கள் மாறும் போது, அதற்கான அறிவிப்பு மொபைல் போனில் தெரிவிக்கப்படும். இதன் மூலம், ரோமிங் வசதியை, வாடிக்கையாளர் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.ரோமிங் வசதி முழுமையாக நீக்கும் பட்சத்தில், இதுபோன்ற அறிவிப்புகள் வராது. மொபைல் போனில் எப்போதும், எஸ்.டி.டி., வசதி இருக்கும்.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது: அனைத்து மொபைல் போனிலும், எப்போதும், ரோமிங் வசதி இருக்கும் நிலையில், பயன்பாடு அதிகமாகும். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, கூடுதல் வருவாய் கிடைக்கும்.ரோமிங் முழுமையாக நீக்கப்படுவதால், அதற்கான கட்டணம், துவக்கத்தில் குறைவது போல் தெரிந்தாலும், ஒரு அழைப்புக்கு கணக்கிடப்படும், நேரத்தை குறைத்து, கட்டணத்தை அதிகப்படுத்த வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment