Friday 19 June 2015

ஆசிரியர் பற்றாக்குறையால் தடுமாறும் மாநகராட்சி பள்ளிகள்

கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில், துவக்கப்பள்ளிகள் -41, நடுநிலைப்பள்ளிகள் -14, உயர்நிலைப்பள்ளிகள் -11, மேல்நிலைப்பள்ளிகள் - 16உள்ளன. பள்ளிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், 384 ஆசிரியர்கள்; உயர்நிலைப்பள்ளிகளில், 113 ஆசிரியர்கள்; துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 107 ஆசிரியர்கள்; துவக்கப்பள்ளிகளில், 201 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.இதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடத்த, 112 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 30 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. துவக்க,நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், 20 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருந்தாலும், இருக்கும் ஆசிரியர்களை கொண்டும், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக ஆசிரியர்களை நியமித்தும், கல்வி போதிக்கப்படுகிறது.

மேல்நிலை வகுப்புகளுக்கு மொழிப்பாடம் மட்டுமின்றி, இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், வணிக கணிதம், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கு, 16 பள்ளிகளிலும், ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் சூழல் உள்ளது.மாநகராட்சி ஆசிரியர்கள் கூறுகையில், 'மேல்நிலை வகுப்புகளில், அந்தந்த பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், தேர்ச்சி சதவீதம் பாதித்துள்ளது. கடந்த 1ம் தேதி, இக்கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கியுள்ளன. பிளஸ் 1 பாட வகுப்புகள், 15ம் தேதி துவங்கியுள்ளது. காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பினால் மட்டுமே, இக்கல்வியாண்டில், தேர்ச்சி சதவீதம் சரிவதை தடுக்க முடியும்.

மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியும்' என்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்து, பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., வாயிலாக ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என, உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியால் ஆசிரியர்கள் நியமிக்க முடியாததால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்' என்றனர்.

No comments:

Post a Comment