Saturday 27 June 2015

பிஎப் கணக்கு எண் வைத்திருப்பவரா? ஆதார் எண் கட்டாயம்

சென்னை:  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒரு மாத காலத்திற்குள் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் உறுதி ஆவண படிவம் - 11ஐ (புதியது) நிறுவன உரிமையாளர்கள்  கட்டாயமாக பெறவேண்டும். மற்றும் படிவத்திலுள்ள விவரங்களை நிரந்தர கணக்கு எண் (யுஏஎன்.) இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 
தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் நடப்பு உறுப்பினர்களின் பொது கணக்கு எண் (யுஏஎன்) விவரங்களை 15 நாட்களுக்குள் தெரிவித்து அதற்கான ஒப்புகை பெற்றுக் கொள்ளவேண்டும். உறுப்பினர்களின் கேஒய்சி-ல் அளிக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு, பான் எண், ஆதார் எண்ணை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யவேண்டும். ஆதார் எண்  இல்லாத உறுப்பினர்களிடம்  இருந்து ஒரு மாதத்திற்குள் ஆதார் எண் பெறவேண்டும். உறுப்பினரது ஆதார் எண் பெறப்பட்டவுடன் நிரந்தர கணக்கு எண் (யுஏன்) இணையதளத்தில் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.


உறுப்பினரின் கணக்கு எண் விவரம், இதர உரிய விவரங்களையும் முழுமையாக அளிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்ட பிறகே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் நிறுவன உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.  தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்கள் சட்டப்படி செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பு தொகையினை கட்டாயமாக மின்னணு பரிமாற்ற முறையிலான இணையதள வங்கி சேவையின் மூலமாக செலுத்தவேண்டும். 
ஒரு லட்சத்திற்கும் குறைவாக பங்களிப்பு தொகை செலுத்தும் நிறுவனங்கள் தொடர்ந்து வங்கி காசோலைகளின் மூலமாக தொகையினை செப்டம்பர் 2015 வரை செலுத்தலாம். அதன் பின்னர் மின்னணு பரிமாற்ற முறையிலான இணையதள வங்கி சேவையின் மூலமாக செலுத்த வேண்டும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி. பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment