Monday 15 June 2015

மூடப்படும் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க மாற்று வழி என்ன? - விளக்கம் தருகிறார் பேராசிரியர் கோகிலா தங்கசாமி

ஆங்கில மோகம் காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் தமிழக கிராமப்புற அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவு ஆப்பிரிக்கர்களைப்போல, தமிழர்களும் வரும் காலத்தில் தாய்மொழி அடையாளத்தை இழக்க நேரிடும் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்காக அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க மாற்று வழிகளை முன்வைக்கிறார் பேராசிரியர் கோகிலா தங்கசாமி.
தமிழகத்தில் 30 சதவீத கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
குறைந்திருப்பதாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 178 அரசுப் பள்ளிகளில் 20-க்கும் குறை வான மாணவர்களே சேர்ந்துள் ளதும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சாக் குளத்தில் 52 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில், தற்போது ஒரு மாணவர் கூட சேராததும் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் நிலைகளை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
நகர்ப்புறம் மட்டுமின்றி, கிராமப் புறங்களிலும் பெற்றோர் தங்களது குழந்தைகளை, தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
கிராமப்புற அரசு பள்ளிகள் ஒவ்வொன்றும், தமிழ் மொழியோடு 200 ஆண்டுகளுக்கு மேலான தொடர்பு கொண்டவை. தமிழகத்தில் கடந்த தலைமுறை யைச் சேர்ந்தவர்கள், அதற்கு முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள், கல்வியறிவு பெறுவ தற்கு காரணமாக இருந்தவை இந்த கிராமப்புற அரசுப் பள்ளிகள்தான்.
அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் வந்துள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அரசு தமிழ் பள்ளிகளின் தற்போதைய நிலை, ஆங்கிலப் பள்ளிகள் வருகை யால் கவலைக்கிடமாக உள்ளதாக கல்வியாளர்கள் ஆதங்கம் தெரி வித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி ஆராய்ச்சித் துறை முன்னாள் இயக்குநரும், பேராசிரியருமான கோகிலா தங்க சாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் பல அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. சத்தமில்லாமல் கிராமங் களில் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு முதல் காரணம், பெற்றோரின் ஆங்கில மோகம். தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த இலவச பாடநூல், நோட்டு, சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி, இலவசமாக கல்வியை யும் வழங்குகிறது. இவ்வளவு சலு கைகள் வழங்கப்பட்டும் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணத்தை கல்வியாளர்களை கொண்டு ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.
அரசு நடத்தும் தொடக்கப் பள்ளி களை ஏதோ சில ஆசிரியர்களும், 20, 30 மாணவர்களும் இருக் கின்ற சாதாரண இடமாகக் கருதி விடக் கூடாது. கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகள் தமிழர்களு டைய அடையாளம். ஆப்பிரிக்க நாடுகளில் ஆங்கிலேயர் வருகை யால் அங்குள்ள மக்கள், தங்கள் தாய்மொழியை மறந்து ஆங்கிலத் திலேயே உரையாடுகின்றனர்.
கிராமப்புற அரசுப் பள்ளிகள் மூடப்படுமானால், தமிழன், தமிழ் மொழி அடையாளம் மறைந்து வருவதாகத்தான் அர்த்தம். பிற் காலத்தில் தமிழன் இருப்பான். தமிழ் இருக்காது. அரசு வேலை கிடைக்காவிட்டால் மட்டுமே, இளைஞர்கள் தற்போது தனியார் வேலைகளுக்குச் செல்கின்றனர்.
அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு, அரசுப் பள்ளிகளுக்கும் ஏற்பட, அரசு நடத்தும் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆங்கிலவழிக் கல்வியை புகுத்துவது எதிர்மறை யான விளைவுகளையே ஏற்படுத்தும்.
அது சரியான தீர்வாகவும் அமையாது. ஆங்கில அறிவை மாணவர்கள் பெற அரசு தொடக்கப் பள்ளிகளிலேயே ‘பேச்சு வழி’ ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்படி செய்தாலே தனியார் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளை நோக்கி பெற்றோர் ஓடமாட்டார்கள்.
அரசுப் பள்ளிகளை காப்பது, தமிழ்மொழி, தமிழர்களை காப்ப தற்குச் சமம். அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க, அரசு 2 விஷயங்களை முன்னிலைப்படுத்தலாம்.
ஒன்று, அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமென்றால் ஒருவர் கட்டாயம் 5-ம் வகுப்பு வரையாவது, அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தலாம். ஒருவர் தனியார் பள்ளியில் படித்துவிட்டு, வேலைக்கு மட்டும் அரசு பணிக்கு வருவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
இரண்டாவது, பொதுமக்கள், மாணவர்களுக்கு முன்னுதாரண மாக இருக்கக் கூடியவர்கள் ஆசிரியர்கள். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களே அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கையை இழக்கும்போது, மற்ற பெற் றோரை குறை சொல்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும். இந்த இரண்டு நடைமுறைகளை பின்பற்றினால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை தற்காலிகமாக தடுக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment