Monday 13 April 2015

ஹாக்கி உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா


உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி. 

மலேசியாவில் நடைபெறும் அஸ்லான் ஷா ஆடவர் ஹாக்கி சர்வதேச போட்டியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

இளம் இந்திய ஸ்ட்ரைக்கர் நிகின் திம்மையா 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஆனாலும், இந்திய அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே சாம்பியன்ஷிப் தகுதியிலிருந்து வெளியேறிய இந்திய அணி சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி அபாரமான முழுத் திறமையை வெளிப்படுத்தியது.

ஆட்டத்தின் 4 பகுதிகளிலும் இந்தியா ஒவ்வொரு கோல் அடித்தது. முதல் நிமிடத்தில் வி.ஆர். ரகுநாத் கோல் அடித்தார். அதன் பிறகு நிகின் திம்மையா ஆதிக்கம் செலுத்தி 23, 32, 60-வது நிமிடங்களில் 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

ஆஸ்திரேலிய அணிக்காக டேனியல் பீல் 14-வது நிமிடத்திலும் மேட் கோடஸ் 53-வது நிமிடத்திலும் கோல்களை அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்களில் 7 புள்ளிகளை பெற்றது இந்தியா. நாளை 3-ம் 4-ம் இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி கொரியாவையோ அல்லது நியூஸிலாந்தையோ சந்திக்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு 2 கோல்களை விட்டுக் கொடுத்ததைத் தவிர இந்திய அணியினரின் ஆட்டம் எந்த நிலையிலும் சோடை போகவில்லை. ஒட்டு மொத்த ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

தொடக்கத்திலிருந்தே இந்தியா தாக்குதல் ஆட்டம் ஆடியது. அதனால் 2 பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. அதில் ரகுநாத் ஒன்றை அபாரமாக கோலாக மாற்றி முன்னிலை கொடுத்தார். 10-வது நிமிடத்தில் மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் பலனளிக்கவில்லை. ரமன்தீப் சிங் அடித்த ஷாட்டை ஆஸி. கோல் கீப்பர் கிளெமன்ஸ் தடுத்தார் ஆனால் பந்து பட்டுத் திரும்பியது அதனை ஆகாஷ் தீப் சிங் மீண்டும் கோல் நோக்கி அடித்த போது கோலுக்கு வெளியே சென்றது.

இடையே இந்திய அணியின் நட்சத்திர கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இரண்டு கோல் முயற்சிகளைத் தடுத்தார். நிகின் திம்மையா அதன் பிறகு 2 கோல்களை அடித்தார். மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த 3வது பெனால்டி கார்னரில் கோல் வாய்ப்பை ஸ்ரீஜேஷ் முறியடித்தார்.

இந்தத் தொடரில் இதற்கு முன் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அதிர்ச்சி அளித்துள்ளது.

No comments:

Post a Comment