பேரூராட்சிப் பகுதிகளில் ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படும். மேலும், அரசு அலுவலர்கள் அவரவர் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கேட்டுக் கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 16 பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நந்தகோபால் மேலும் பேசியதாவது:
பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகளால், அவற்றின் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. அரசு அலுவலகங்கள், அரசு ஆய்வுக் கூடங்களில் சிற்றுண்டி வழங்க பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக வேலூரை உருவாக்க வேண்டும். இதற்காக பிளாஸ்டிக் அல்லாத பொருள்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பைகள், டம்ளர்கள், தட்டுகள், கிண்ணங்கள் ஆகியவற்றை உணவங்களிலும், பொது மக்களும் பயன்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதோடு, பிளாஸ்டிக் பைகள், அதை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் அனைத்து வகையான பொருள்களையும் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த விழிப்புணர்வு கற்பித்தல், செயல்படுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற 3 நிலைகளில் மேற்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கை மூலப் பொருளாகப் பயன்படுத்தி தூக்கியெறியும் வகையிலான பொருள்களை இருப்பு வைத்துள்ளோர், விற்பனையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து, அவற்றை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என்றார் நந்தகோபால்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய்த் துறையினர், செயல் அலுவலர்கள், மகளிர் குழுவினருக்கு துணியினால் ஆனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பைகளை அவர் வழங்கினார்.
No comments:
Post a Comment