Tuesday, 18 August 2015

மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகை: சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினை தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவியர்கள் மத்திய அரசின் மெலானா ஆசாத் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை 2 தவணையாக 11, 12-ஆம் வகுப்புக்கு தனித்தனியாக தலா
ரூ. 6 ஆயிரம் வீதம் பிரித்து வழங்கப்படும். கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணம், பாடப் புத்தகம், எழுது பொருள்கள், உண்டு உறையுள் கட்டணங்களுக்காக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நிகழாண்டில் தமிழகத்தில் 1707 சிறுபான்மையின மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் உதவித் தொகை பெற 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்று நடப்பாண்டில் 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11-ஆம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ், ஓய்வூதிய ஆணை தொடர்பான விவரங்களை ரூ. 20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத் தாளில் உறுதி ஆவணத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் உறுதி ஆவணம், இதர விவரங்களை
maef.nic.in 
இணையதளத்திலிருந்து படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். கல்வி நிலையத் தலைமை ஆசிரியர், தாளாளர், தங்கள் கல்வி நிலையத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவிகளிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சரிபார்த்து, வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும்வகையில் அனுப்ப வேண்டும்.
2015-2016ஆம் கல்வி ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விவரங்கள், விண்ணப்பபடிவங்கள் இணையதளம் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு உதவித் தொகை பெற அம்மாணவர்கள் 11-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்களை உடன் மேற்படி முகவரிக்கு தொடர்புடைய கல்வி நிலையங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment