Tuesday, 18 August 2015

விஞ்ஞானி வளர்மதிக்கு அப்துல்கலாம் விருது; லாரி ஓட்டும் பெண் ஜோதிமணி கல்பனா சாவ்லா விருதை பெற்றார்

சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்துல்கலாம் பெயரில் முதல் விருது
ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின்போது, சாதனையாளர்களுக்கு முதல்- அமைச்சரால் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, அவர் பெயரிலான முதல் விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்ட இயக்குனர் என்.வளர்மதிக்கு கிடைத்துள்ளது.
சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவின் போது அந்த விருதை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து வளர்மதி பெற்றுக்கொண்டார். அப்துல்கலாம் விருதைப் பெற்ற வளர்மதிக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு, 8 கிராம் தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.

கல்பனா சாவ்லா விருது

துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் உயரிய விருதான கல்பனா சாவ்லா விருது, ஈரோடு மாவட்டம், கனகம்பாளையத்தைச் சேர்ந்த லாரி பெண் டிரைவர் ஜோதிமணிக்கு வழங்கப்பட்டது.

இவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலன் விருது

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவையாற்றியவர்களுக்கும் விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.சம்பத்குமார் (சிறந்த மருத்துவர்), தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பி.சிம்மச்சந்திரன் (சிறந்த சமூகப் பணியாளர்),

திருநெல்வேலியில் உள்ள ஸ்காட் நிறுவனம் (சிறந்த தொண்டு நிறுவனம்), காஞ்சீபுரம் மாவட்டம், மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அன்னை இல்லம் (சிறந்த தொண்டு நிறுவனம்), மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு அளித்த காஞ்சீபுரம் மாவட்டம், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம்,

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ஆகியோருக்கு மாற்றுதிறனாளிகளுக்கான சேவை விருதுகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய மாவட்ட கலெக்டர்களாக த.பொ.ராஜேஷ் (கிருஷ்ணகிரி), எம்.ரவிகுமார் (தூத்துக் குடி), இல.சுப்பிரமணியன் (மதுரை) ஆகியோரின் பெயர்கள் இந்த விழாவில் வெளியிடப்பட்டன.

மகளிர் நலனுக்கான விருதுகள்

அதுபோல் மகளிர் நலனுக் காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளர்களுக் கான விருதுகளையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், தில்லைஸ்தானம் ஸ்ரீவெங்கடேஸ்வரர் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் நாமக்கல் மாவட்டம் பொத்தனூரைச் சேர்ந்த ஆர்.சிவகாமவள்ளி அதற்கான விருதுகளை முறையே பெற்றுக்கொண்டனர்.

முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளை பெண்கள் பிரிவில் எஸ்.அன்னகாமு என்பவரும், ஆண்கள் பிரிவில் மணிமாறன், டெனித் ஆதித்யா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

இந்த விருதுகளைப் பெற்றவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

இஸ்ரோவுக்கு அர்ப்பணம்

என்.வளர்மதி:- அரியலூரைச் சேர்ந்த நான் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பிறகு கோவை ஜி.சி.டி.யிலும், எம்.இ. பட்டப்படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்திலும் படித்தேன். எனது தந்தை தமிழக அரசின் ஊழியராக இருந்தார்.

இஸ்ரோவில் கடந்த 32 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறேன். செயற்கைக் கோள்களை உருவாக்குவது எனது பணி. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரிலான விருதை அளித்து என்னை கவுரவித்ததன் மூலம் இஸ்ரோ நிறுவனத்தை தமிழக அரசு கவுரப்படுத்தியுள்ளது. இந்த விருதை நான் இஸ்ரோவுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இளைஞர்களை உற்சாகப்படுத்தும்

இந்த விருதை எனக்கு வழங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு கிடைத்தது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

வருங்கால இளைஞர் சமுதாயத்தினரையும், சமுதாய நற்பணி மற்றும் பொது சேவையில் இருப்பவர்களையும் ஊக்குவிக்கும், உற்சாகப்படுத்தும் விருதாக இது அமைந்துள்ளது. இந்த விருதை நிறுவியிருப்பது வரவேற்கத்தகுந்தது.

2012-ம் ஆண்டில் நிகழ்த்திய ரேடார் இமேஜிங் சாட்டிலைட் (ஆர்.ஐ.சாட்) என்ற தொழில்நுட்பம்தான் எனது சாதனையாக நான் கருதுகிறேன்.

No comments:

Post a Comment