மும்பை, தமிழ்ப்பள்ளி ஆசிரியர் உள்பட 50 ஆசிரியர்களுக்கு மேயர் விருதுகளை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேயர் விருது
மும்பை மாநகராட்சி ஆண்டுதோறும் செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினத்தன்று மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து மேயர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மேயர் விருது பெறுவதற்கு மொத்தம் 181 ஆசிரியர்களின் பெயர் மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
இவர்களில் 50 ஆசிரியர்கள் மேயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதிகபட்சமாக மராத்தி பள்ளி ஆசிரியர்கள் 15 பேர் மேயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தி பள்ளி ஆசிரியர்கள் 4 பேரும், உருது பள்ளி ஆசிரியர்கள் 4 பேரும், குஜராத்தி பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும், ஆங்கிலப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, தெலுங்குப்பள்ளி, கன்னடப்பள்ளி ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு ஆசிரியரும் மேயர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். இதில் சயான் கோலிவாடாவில் உள்ள கே.டி.கெய்க்வாட் மாநகராட்சி தமிழ்ப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் எஸ்.பி.அந்தோணி ஜேம்ஸ் என்பவரும் மேயர் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
இதேபோல மாநகராட்சி பள்ளி ஓவிய ஆசிரியர், சங்கீத ஆசிரியர் உள்ளிட்டோரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரொக்கப்பரிசு
மேயர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 5–ந் தேதி வில்லேபார்லேயில் உள்ள தினாநாத் மங்கேஷ்கர் நாட்டிய மந்திர் கலையரங்கத்தில் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் மேயர் சினேகல் அம்பேக்கர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
விருது பெறும் ஆசிரியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு, மாநகராட்சி முத்திரை பதித்த தங்க பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இந்த தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment