Tuesday, 18 August 2015

80 சதவீத இணையதள மருத்துவ தகவல்கள் நம்பகமானது இல்லை: மருத்துவர் எச்சரிக்கை

இணையதளத்தில் உள்ள 80 சதவீத மருத்துவத் தகவல்கள் நம்பகமானது இல்லை என சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் கூறினார்.
 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறையின் சார்பில் சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் இணையதள மருத்துவ அறிவு வரமா சாபமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

 இது தொடர்பாக பொதுமக்கள் கூறிய கருத்துகள்:
 நமக்கு அருகிலுள்ள மருத்துவர்கள், மருத்துவனைகள் குறித்த தகவல்களைப் பெற முடிகிறது. மருத்துவர்கள் படிப்பு, அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் கிடைப்பதால், அதன் அடிப்படையில் மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை பெற முடிகிறது. நோய் குறித்த அடிப்படை விவரங்களைத் தெரிந்து கொண்டு மருத்துவர்களிடம் கலந்த பேச முடிகிறது என்று சிலர் தெரிவித்தனர்.
 மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இணையதளத்தில் கூறப்பட்ட மருந்துகளை உட்கொண்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற நேரிடுகிறது. இணையதளத்தில் யார் வேண்டுமானால் தகவல்களை பதவேற்றம் செய்ய முடியும். எனவே தகுதியற்ற நபர்கள் வெளியிடும் தகவல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று இணையதளம் சாபமே என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
 இது குறித்து டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் கூறியது:
 இணையதளத்தில் வெளியிடப்படும் கருத்துகளில் 20 சதவீதம் மட்டும் நம்பகத் தகுந்ததாகும். மீதம் 80 சதவீத தகவல்கள் தவறான கருத்துகளே ஆகும். மேலும் ஒரு மருத்துவம் தொடர்பான ஒரு கட்டுரை அல்லது தகவல் அது வெளியிடப்பட்ட சமயத்தில் சரியானதாக இருந்திருக்கலாம். அந்தத் தகவலை பத்து ஆண்டுகள் கழித்து ஒருவர் படிக்கும் அது அந்த நேரத்தில் பொருந்தாதகாக ஆகலாம்.
 எனவே இணையதளத்தில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதில் கூறப்படும் சிகிச்சைகள், மருத்துவ முறைகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் பின்பற்றக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment