தூய்மை இந்தியா தரவரிசை: சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு இரண்டாம் இடம்
கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்வதன் அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் திருச்சி நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 முதல்தர நகரங்களில் சுகாதார பணிகள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அடிப்படையாக கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டது. குறிப்பாக, குடிநீர் தரம், அசுத்தமான தண்ணீரால் ஏற்படும் நோய்களால் இறப்போரின் சதவீதம், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை முக்கியக் கூறுகளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில், கர்நாடகாவின் மைசூர் நகரம் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் திருச்சி நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நவி மும்பை, கொச்சி, ஹாசன், மாண்டியா, பெங்களூர், திருவனந்தபுரம், ஹாலிசாகர் (மேற்கு வங்காளம்), கேங்டாக் (சிக்கிம்) ஆகிய நகரங்கள் டாப்-10 பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த பட்டியலில் தலைநகர் டெல்லி நகராட்சி 398-வது இடத்தில் உள்ளது. டெல்லி கண்டோன்மென்ட் 15-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் உள்ள டாப்-100 நகரங்களில் அதிகபட்சமாக மேற்கு வங்காள மாநிலத்தின் 25 நகரங்கள் உள்ளன. தென் மாநிலங்களில் இருந்து 39 நகரங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. கிழக்கிந்திய மாநிலங்களில் இருந்து 27 நகரங்களும், மேற்கு இந்திய மாநிலங்களில் இருந்து 15 நகரங்களும், வட இந்தியாவில் 12 நகரங்களும், வடகிழக்கு மாநிலங்களில் 7 நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் கர்நாடக மாநிலம் முன்னிலை வகிக்கிறது. பீகார் மாநில தலைநகர் பாட்னா மிகவும் பின்தங்கி 429-வது இடத்தில் உள்ளது. இதுதவிர, மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களும் இந்த பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. கடைசி இடத்தில், அதாவது 476-வது இடத்தில் மத்திய பிரதேசத்தின் டாமோ நகரம் உள்ளது.
No comments:
Post a Comment