Friday, 19 June 2015

நெட்" தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில், கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தகுதித் தேர்வு முடிவுகள் நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.


cbseresults.nic.in என்ற இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பதவிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு "நெட்' நடத்தப்படுகிறது.


இந்தத் தேர்வை யுஜிசி நடத்தி வந்தது. கடந்த 2014 டிசம்பர் மாதம் முதல் இந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பை சி.பி.எஸ்.இ. வசம் யுஜிசி ஒப்படைத்தது.
அதன்படி, டிசம்பர் மாதத் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தியது. இந்த நிலையில் அடுத்த "நெட்' தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு தேதியும் நெருங்கிய நிலையில், டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது.

யுஜிசி, சி.பி.எஸ்.இ. இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே தேர்வு முடிவுகள் வெளியிடாததற்கு காரணம் என கூறப்பட்டது. இப்போது பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது. ஜூன் 5 அல்லது 6-ஆம் தேதிகளில் நிச்சயம் முடிவுகள் வெளியிடப்பட்டு விடும் என யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் தெரிவித்திருந்தார்.

ஆனால், அப்போதும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு (ஜூன் 15) தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது.

தேர்வு பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வர்கள் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் எடுத்துள்ள மதிப்பெண், கட்-ஆஃப் மதிப்பெண் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இதில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment