நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நம்பிநகரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்து சிங்கிகுளம் மற்றும் மலையடி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40 குழந்தைகள் தனியாருக்கு சொந்தமான வேனில் வீட்டுக்கு புறப்பட்டனர். வேனை பாணான்குளத்தைச் சேர்ந்த டிரைவர் சிவா(29) ஓட்டினார். வேன் நாங்குநேரி டோல்கேட்டை ஒட்டியுள்ள வரமங்கைபுரம் ரோட்டில்
சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த குழந்தைகள் அலறினர்.
அப்போது அந்த வழியாக மற்றொரு வேனில் வந்த மில் தொழிலாளர்கள் இதை பார்த்து நொறுங்கிய வேனுக்குள் காயமடைந்து சிக்கி தவித்த குழந்தைகளை மீட்டனர். இதில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், டிரைவர் சிவா போதையில் வேனை தாறுமாறாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment