கோவையை சீர்மிகு நகரமாக உருவாக்க ஏதுவாக அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு அறிவித்துள்ள சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கத் திட்டத்தின்கீழ், நாடு முழுவதிலும் 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் முதல்கட்டமாக 20 நகரங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. இதையடுத்து, கோவையை சீர்மிகு நகரமாக உருவாக்கும் முயற்சிக்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கோவையில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, சீர்மிகு நகரம் திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தை அறிய வசதியாக தனியார் தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள ஜ்ஜ்ஜ்.ள்ட்ஹல்ங்ஹ்ர்ன்ழ்ஸ்ரீண் ற்ஹ்.ய்ங்ற் என்ற இணையதளத்தைத் தொடக்கிவைத்து அமைச்சர் வேலுமணி பேசியது:
சீர்மிகு நகரம் திட்டத்துக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நகரங்களில் ரூ. 12 ஆயிரம் கோடியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும்.
ஆளுகை, திட்டமிடல், நிர்வாகம் போன்ற அமைப்பு ரீதியிலான வசதிகளும், குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும், கல்வி, பொழுதுபோக்கு போன்ற சமூக வசதிகளும், முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பொருளாதார வசதிகளும் இந்த நகரங்களில் செய்யப்படும்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமான நகர்ப்புற மறுநிர்மாணம் சீரமைப்புக்கான அடல் இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள 32 நகரங்களில் மத்திய அரசின் 50 சதவீத நிதியுதவியுடன் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. அந்தத் திட்டத்தின் கீழும் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகருக்கு முதல்வர் ஜெயலலிதா இதுவரை சுமார் ரூ. 2,678 கோடியை ஒதுக்கியுள்ளார். இந்தத் தொகையில் மழைநீர் வடிகால் வசதி, புதை சாக்கடைத் திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலையம், சங்கனூர் ஓடை சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில், கோவையை சீர்மிகு நகரமாக உருவாக்க மாநகர பொதுமக்கள், தங்களது கருத்துகளைப் பதிவு செய்லாம் என்றார்.
நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், ஆணையர் விஜயகார்த்திகேயன், மேயர் ப.ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment