தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்டத்திற்கு 1000, 6 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 5 மாத தற்காப்பு கலைப் பயிற்சி வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை இப் பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி
தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், புதிய அணுகுமுறையிலானக் கல்வித் திட்டத்தின் கீழ் (Innovation Component) பெண் கல்வி என்ற உடற்கூறின் கீழ் மாணவியருக்கான தற்காப்பு பயிற்சி (Self Defense Training) வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் உயர் தொடக்க நிலையில் (6 முதல் 8 வகுப்பு) மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கராத்தே தற்காப்புக் கலைப் பயிற்சி, திறமையான பயிற்சியாளர் மூலம் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தவிர்த்த 5 மாதங்கள் இப் பயிற்சி வழங்கப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நரையன்குளம் ஒத்தப்பட்டி, அக்கரைப்பட்டி மற்றும் நகராட்சி நடுநிலைப் பள்ளி கம்மாப்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய 4 பள்ளிகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்திற்கு தலா ஒன்னறை மணி நேரம் கொண்டு இரு நாட்களுக்கு இப் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில சோட்டோகான் தலைமைப் பயிற்சியாளர் சென்சாய் எம்.செபஸ்தியான் இப் பயிற்சியை வழங்குகிறார் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ஆசிரியப் பயிற்றுநர்கள் தர்மர், ஜூடு அமலன், தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா, பட்டதாரி ஆசிரியர்கள் பா.பாத்திமா ஞானம், வே.ராஜேஸ்வரி, செ.சண்முகநாதன், இடைநிலை ஆசிரியர்கள் ச.பொன்மலர், கோ.ஜெயக்குமார் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி அ.சீத்தாலட்சுமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment