அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.மேலும், இணையவழி வகுப்புகள் கணினிவழி வகுப்புகள், பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம்போன்ற புதுமையான பல திட்டங்களை அறிமுகப்படுத்தி கல்வித் தரத்திற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது.
*தரமான கல்வி கற்பிக்கப்படுவதை உறுதிசெய்ய 76,338 கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த அரசு ஒப்புதல் அளித்தது மட்டுமல்லாமல், இதுவரை 72,597 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
* மடிக்கணினிகள், இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், காலணிகள், புத்தகப் பைகள், பேருந்து பயணச் சலுகை அட்டைகள், மிதி வண்டிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 2014-2015 ஆம் ஆண்டு வரை மொத்தம் 8,748.89 கோடி ரூபாய் செலவில் இந்த அரசு வழங்கியுள்ளது.
* தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெற்றுள்ளனர்.
சேர்க்கை விகிதம் உயர்வு
* கடந்த நான்கு ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 11 பல்தொழில்நுட்பவியல் கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு தொடங்கியுள்ளது. இதேபோன்று, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து 2013-2014 ஆம் ஆண்டுவரை 1,800 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 796 புதிய பாடப் பிரிவுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் 10,204 மாணவர்கள் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.
* உயர் கல்வி சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 21 சதவீதமாக உள்ள போதிலும் தமிழ்நாட்டில் 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
* கடந்த நான்கு ஆண்டுகளில் 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதோடு, 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் நவீன கருவிகளோடு கூடிய மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
* நடந்து முடிந்த 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் 33 போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 7 விளையாட்டு வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களையும், 4 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த 12 விளையாட்டு வீரர்கள் 5 தங்கப் பதக்கங்களையும், 5 வெள்ளிப் பதக்கங்களையும், 4 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். இந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பான ஊக்கத் தொகை பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
* சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் சத்துச் செறிவினை மேம்படுத்தும் வகையில், ஆண்டிற்கு 103.28 கோடி ரூபாய் கூடுதல் செலவில் பல்வகை உணவு வகைகள் வழங்குவதை இந்த அரசு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
* உயர் கல்விக்கான உதவித் தொகையை தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தி வழங்கியது இந்த அரசின் முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும்.
* வரவிருக்கும் கூட்டத் தொடரில் மாநிலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதித்து, தொலைநோக்குத் திட்டம் 2023-ல் திட்டமிடப்பட்டவாறு உயர் வளர்ச்சியை எட்டத் தேவையான மேலும் பல முன்முயற்சிகளை இந்த பேரவை எடுக்கும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா தனது உரையில் கூறினார்.
No comments:
Post a Comment