பொறியியல், மேலாண்மை உள்ளிட்ட 88 பாடப்பிரிவுகளில் இலவச இணையதளக் கல்வி அளிக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் பேராசிரியர் கே.ஆர்.சுந்தர்ராஜன் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
பிளஸ் 2 படிப்பை முடிக்கும் பெண்கள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக "உடான்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஐஐடி- ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதற்கான வழிமுறைகள் இணையதளம் மூலம்
அளிக்கப்படும். இதற்காக உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசானது புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக பள்ளிக் கல்வியில் 13 தலைப்புகளிலும், உயர் கல்வியில் 20 தலைப்புகளிலும் பொதுமக்களின் கருத்துகளை தெரிவிக்கும் நடைமுறையை ஜனவரி 26-ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் www.mygov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இணையதளம் மூலம் இலவசமாகப் பாடம் பயிலும் "ஸ்வயம்' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்தை மத்திய அரசு நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் உதவியுடன் இணையதளம் மூலம் கற்கலாம்.
தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் பொறியியல், மேலாண்மை, அடிப்படை அறிவியல் உள்ளிட்ட 88 பாடப் பிரிவுகளில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. தற்போது ஆராய்ச்சி, உயர்கல்விக்காக இந்தியாவிலிருந்து மாணவர்கள் வெளிநாடு செல்கின்றனர். அவர்களை இந்தியாவிலேயே கல்வி பயில வைக்கும் வகையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்தியாவுக்கு வந்து கல்வி பயிற்றுவிக்க "கியான்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment